ADVERTISEMENT

அல் அய்னில் இன்று பெய்த இடியுடன் கூடிய கனமழை: இந்த வாரம் முழுவதும் மழை நீடிக்கும் எனத் தகவல்!!

Published: 5 Aug 2025, 8:14 PM |
Updated: 5 Aug 2025, 8:14 PM |
Posted By: Menaka

கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு  அமீரகத்தில் வானிலை நிலையற்றதாக இருக்கும் நிலையில், இன்றைய தினம் (ஆகஸ்ட் 5, செவ்வாய்க்கிழமை) அல் அய்னின் சில பகுதிகளில் கனமழை பெய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அல் அய்னின் கிழக்குப் பகுதியில் உள்ள உம் கஃபா, சா’ஆ மற்றும் கத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணியளவில் மழை பெய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானம் காணப்பட்டதாகவும், அதே நேரத்தில் துபாயின் சில பகுதிகளில் தூசி நிறைந்த சூழ்நிலை இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட சமீபத்திய வானிலை அறிக்கையின் படி, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரை வெப்பச்சலன (மழை) மேகங்கள் தொடர்ந்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்களில் நிலையற்ற வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது மேற்பரப்பு குறைந்த அழுத்த அமைப்பு, ஈரப்பதமான தென்கிழக்கு காற்று மற்றும் வடமேற்கிலிருந்து குறைந்த அழுத்த நீட்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக NCM தெரிவித்துள்ளது. இந்த நிலைமைகள், மேல் காற்று சீர்குலைவுகளுடன் சேர்ந்து, மழை பெய்யும் மேகங்களின் அதிகரிப்பிற்கு பங்களிக்கின்றன, இது நாடு முழுவதும் குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிதமான முதல் கனமழையை ஏற்படுத்தும் என்று விவரித்துள்ளது.

ADVERTISEMENT

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பலத்த காற்று திடீரென தூசிப் புயல்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சாலைகளில் தெரிவுநிலை குறையக்கூடும். ஒருபுறம் அமீரகத்தில் மழை பெய்தாலும், நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

AccuWeather வெளியிட்ட அறிக்கையின் படி, அமீரகம் முழுவதும் பகல்நேர வெப்பநிலை 45°C முதல் 49°C வரை இருக்கும் என்றும், இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலை 36°C முதல் 39°C வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரப்பதம் மற்றும் தூசி நிறைந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் குடியிருப்பாளர்களுக்கு அசௌகரியத்தை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளைய வானிலை நிலவரம்

புதன்கிழமைக்கான வானிலை முன்னறிவிப்பில் பகலில் ஓரளவு மேகமூட்டமான மற்றும் மூடுபனியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது, இது உள் பகுதிகளில் மழையை வரவழைக்கக்கூடும். ஈரப்பதம் இரவு முழுவதும் அதிகரிக்கும் மற்றும் புதன்கிழமை காலை வரை, குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதியில் கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மணிக்கு 10 முதல் 25 கிமீ வரை லேசானது முதல் மிதமானது வரை காற்று வீசும், ஆனால் சில நேரங்களில் 40 கிமீ வரை வீசக்கூடும், இதனால் தூசி நிறைந்த வானிலை நிலவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நிலைமைகளைப் பொருத்தவரையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் லேசானது முதல் மிதமானது வரை அலையின் சீற்றம் இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இத்தகைய மோசமான வானிலையின் போது, குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும், நிலையற்ற வானிலையின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அமீ்கர அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel