அமீரகம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராஸ் அல் கைமாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையான ஷேக் முகமது பின் சலீம் சாலை (E11) ஐ மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தைத் தொடங்குவதாக அந்த எமிரேட்டின் பொது சேவைகள் துறை அறிவித்துள்ளது, இது போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதையும் எமிரேட் முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அல் ஹம்ரா ரவுண்டானாவிலிருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலை (E311) சந்திப்பு வரை நடைபெறவுள்ள இந்த மேம்பாடு, வருகின்ற திங்கள், செப்டம்பர் 1 அன்று தொடங்கும் என்றும், அதே நாளில் கட்டுமானம் மற்றும் சாலை மூடல்கள் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது சேவைகள் துறையின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக பிரிக்கபப்டும் என்பது தெரிய வந்துள்ளது.
முதல் கட்டம்
முதல் கட்டத்தில் ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகளிலிருந்து நான்கு பாதைகளாக சாலையை விரிவுபடுத்துவதும், உள்ளூர் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்த ஒரு பிரத்யேக சேவை சாலையை உருவாக்குவதும் அடங்கும்.
கூடுதலாக, மின்சாரம், தொலைத்தொடர்பு, நீர்ப்பாசனம் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற முக்கிய பயன்பாட்டு நெட்வொர்க்குகளை உருவாக்குவது மற்றும் சாலைகளில் வெளிச்சத்திற்காக நவீன LED விளக்கு கம்பங்களை நிறுவுவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது.
எனவே, முதல் கட்ட போக்குவரத்து மாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அல் ஹம்ரா ரவுண்டானாவில் உள்ள E11 இன் பிரிவுகள் மூடப்படும், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளுக்கு திருப்பி விடப்படுவார்கள். அதுமட்டுமின்றி, பணிகளின் போது சீரான போக்குவரத்து இயக்கத்தை பராமரிக்க 2 கிமீ தற்காலிக சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்டம்: பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் போக்குவரத்து தீர்வுகள்
இரண்டாவது கட்டம் சாலை விரிவாக்க செயல்முறையை நிறைவு செய்து முக்கிய போக்குவரத்து மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும், இதில் பின்வரும் நான்கு முக்கிய இடங்களில் புதிய பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்:
- டால்பின் சந்திப்பு (S4)
- E11–E311 சந்திப்பு (D1)
- ரெட் டன்னல் (S3)
- மினா அல் அரபு சுரங்கப்பாதை (F1/F2)
இரண்டாம் கட்ட மாற்றுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பி விடப்படும், மேலும் நெரிசலைக் குறைக்க கூடுதல் பாதைகள் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டம் ராஸ் அல் கைமாவின் மக்கள்தொகை வளர்ச்சியை ஆதரிக்கிறது என்றும், நவீன, திறமையான மற்றும் நிலையான சாலை வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் எமிரேட்டின் நீண்டகால வளர்ச்சி உத்தியுடன் ஒத்துப்போகிறது என்றும் பொது சேவைகள் துறை வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel