துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நாசர் பின் லூட்டா மசூதிக்கு அருகில் உள்ள ராஸ் அல் கோர் சாலையில் இருந்து நாத் அல் ஹமர் இன்டர்செக்ஷன் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்காக புதிய 850 மீட்டர் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அல் ரெபாட் ஸ்ட்ரீட்டிலிருந்து வரும் போக்குவரத்துக்காகவும், நாத் அல் ஹமர் நோக்கி இடதுபுறம் திரும்புவதற்காகவும் இன்டர்செக்ஷனில் உள்ள பாதையை விரிவுபடுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மேம்பாடு RTAவின் 2025 விரைவான போக்குவரத்து மேம்பாடுகளின் ஒரு பகுதியாகும், குறிப்பாக, கோடை 2025 மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஸ் அல் கோர் சாலை மற்றும் அல் ரெபாட் ஸ்ட்ரீட்டில் நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதை இந்த மேம்படுத்துதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
RTAவின் கூற்றுப்படி, புதிதாக அமைக்கப்படவுள்ள கூடுதல் பாதை, நாத் அல் ஹமர் இண்டரசெக்ஷனை நோக்கிய போக்குவரத்து திறனை 33 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இது சாலையின் திறனை மணிக்கு 4,800 இலிருந்து 6,400 வாகனங்களாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நெரிசலான மாலை நேரங்களில் பயண நேரம் 15 நிமிடங்களிலிருந்து 11 நிமிடங்களாகக் குறையும், இதனால் போக்குவரத்து ஓட்டம் 27 சதவீதம் வரை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாத் அல் ஹமர் இன்டர்செக்ஷனில் விரிவாக்கப்படும் பாதை, அல் ரெபாட் ஸ்ட்ரீட்டில் இருந்து இடதுபுறம் திரும்பும் வாகனங்களுக்கான வரிசையைக் குறைக்க உதவும், இது ராஸ் அல் கோர் சாலைக்கு மென்மையான அணுகலை உறுதி செய்யும் என்று கூறப்படுகின்றது.
இந்த மேம்பாடுகள் நாத் அல் ஹமர், அல் ரஷிதியா, அல் குசைஸ் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்கு பயனளிக்கும் என்று RTA தெரிவித்துள்ளது. அவை குடியிருப்பு சமூகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும், தடையற்ற மற்றும் நிலையான இயக்கத்தை வழங்குவதற்கான RTAவின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel