ஐக்கிய அரபு அமீரகம் ‘cloud seeding’ எனப்படும் மழையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்த ஆண்டு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 39 கிளவுட் சீடிங் நடவடிக்கைகள் உட்பட 2025 ஆம் ஆண்டில் இதுவரை 185 cloud seeding பணிகளை முடித்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அதன் கடுமையான கோடைக்காலத்தை அனுபவித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களாக, நாட்டின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை பதிவாகியுள்ளது, அபுதாபி மற்றும் துபாயில் தூசி புயல்கள், மூடுபனி மற்றும் குளிரான வெப்பநிலை ஆகியவை குடியிருப்பாளர்களுக்கு கோடை வெயிலின் கடும் தாக்கத்திலிருந்து நிவாரணம் அளித்துள்ளன.
ஹைக்ரோஸ்கோபிக் ஃப்ளேர்கள், நானோ மெட்டீரியல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மழைப்பொழிவை 10 முதல் 25 சதவீதம் வரை அதிகரிப்பதே இந்த cloud seeding செயல்முறையின் நோக்கமாகும். இந்த நிலையில் அமீரகத்தில் வரும் நாட்களில் வெப்பச்சலன மேகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து வெளியான தகவல்களின் படி, ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய அரபு அமீரகம் கிளவுட் சீடிங்கிற்காக 900 விமான நேரங்களை செலவிடுகிறது, இந்த நடவடிக்கைகளின் செலவு ஒரு விமான மணி நேரத்திற்கு 29,000 திர்ஹம்ஸ் (US$8,000) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 12 சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள், நான்கு பிரத்யேக விமானங்கள் மற்றும் வானிலை ரேடார்கள் மற்றும் தானியங்கி கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளவுட் சீடிங் செயல்முறை விளக்கம்
மூத்த NCM விமானி கேப்டன் மார்க் நியூமன், அமீரகத்தின் அனைத்து எல்லைகளையும் உள்ளடக்கிய ஒரு வழக்கமான கிளவுட் சீடிங் பணிக்கு மூன்று மணிநேரம் வரை ஆகலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, கிளவுட் சீடிங் ஆண்டுதோறும் கூடுதலாக 168 முதல் 838 மில்லியன் கன மீட்டர் மழையை உருவாக்குகிறது என்றும், இது 84 முதல் 419 மில்லியன் கன மீட்டர் வரை பயன்படுத்தக்கூடிய நீரை உற்பத்தி செய்கிறது என்றுன் மதிப்பிடுகிறது.
இந்த பங்களிப்பு அமீரகத்தின் மொத்த வருடாந்திர மழைப்பொழிவான சுமார் 6.7 பில்லியன் கன மீட்டரில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். கிளவுட் சீடிங் செயல்முறைக்கு முந்தைய சகாப்தத்துடன் ஒப்பிடும்போது, சீடிங் செய்யப்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவு 23 சதவீதம் அதிகரிப்பதை ஒரு நீண்டகால ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. சாதகமான சூழ்நிலையில், அமீரகத்தில் கிளவுட் சீடிங் முறையானது மழைப்பொழிவை 15 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும், இது வறண்ட பிராந்தியத்தில் நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக அமைகிறது என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel