ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகள் தங்களின் 4 பிளாக் பாயிண்ட்களை அகற்ற சிறந்த வாய்ப்பு.. பிரச்சாரத்தை அறிவித்த அமைச்சகம்..!!

Published: 11 Aug 2025, 8:01 PM |
Updated: 11 Aug 2025, 8:01 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சகம் (MOI) அதன் வருடாந்திர சாலை பாதுகாப்பு பிரச்சாரமான ‘A Day Without Accidents’ ஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் துறைகளுடனும் ஒருங்கிணைந்து நடத்தப்படும் இந்த முயற்சி, கோடை விடுமுறைக்குப் பிறகு போக்குவரத்து அளவுகள் அதிகரிக்கும் போது கல்வியாண்டின் பாதுகாப்பான தொடக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில் வரவிருக்கும் ஆகஸ்ட் 25, 2025ஆம் தேதியை விபத்துகள் இல்லாத ஒரு நாளாக அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நாளில் போக்குவரத்து விதிமீறல்களைச் செய்யாதவர்களுக்கு சிறப்பு வெகுமதியையும் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆம், ஓட்டுநர்கள் அதிகாரப்பூர்வ MOI இணையதளத்தில் ஒரு உறுதிமொழியைச் சமர்ப்பித்து, ஆகஸ்ட் 25 அன்று எந்த மீறல்களும் பதிவு செய்யப்படாமல் இருந்தால், அவர்கள் தங்கள் உரிமத்திலிருந்து நான்கு கருப்பு புள்ளிகளை (black points) அகற்றலாம். மேலும் ஓட்டுனர்கள் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் டிஜிட்டல் முறையில் இவை நீக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இது குறித்து மத்திய போக்குவரத்து கவுன்சிலின் தலைவர் பிரிகேடியர் ஹுசைன் அகமது அல் ஹரிதி கூறுகையில், பள்ளியின் முதல் நாளில் விபத்துகளைத் தடுப்பதற்காக மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் பொதுவான விதிமீறல்களைத் தவிர்ப்பது குறித்து ஓட்டுநர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.

வாகன ஓட்டுநர்களுக்கான அறிவுரைகள்

  • எப்போதும் சீட் பெல்ட்களை அணியுங்கள்
  • வேக வரம்புகளைப் பின்பற்றுங்கள்
  • மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடியுங்கள்
  • வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்கள் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்
  • அவசரகால வாகனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வாகனத் தொடரணிகளுக்கு வழிவிடுங்கள்

மேலும் இந்த முயற்சியானது எமிரேட்ஸ் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்றும், இது கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்றும் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel