அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதாவது இஸ்லாத்தின் இறுதித் தூதராக போற்றப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், வருகின்ற செப்டம்பர் 5, 2025 வெள்ளிக்கிழமையை அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறையாக ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியில் 12 ரபி அல் அவ்வல் அன்று வரும் இந்த பிறந்தநாள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது. வழக்கமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதியுடன் இந்த விடுமுறை இணைந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் தொடர் மூன்று நாள் விடுமுறையை அனுபவிக்கலாம்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று பிறை நிலவு காணப்படாததைத் தொடர்ந்து இதற்கு முந்தைய மாதமான சஃபர் மாதம் 30 நாட்கள் நீடிக்கும் என கூறப்பட்டு அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இஸ்லாமிய மாதமான ரபி அல் அவ்வல் ஆகஸ்ட் 25 திங்கள் கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய விடுமுறை நாட்களை நிர்வகிக்கும் ஹிஜ்ரி நாட்காட்டி, பிறை நிலவை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு மாதமும் புதிய பிறையைக் கண்டவுடன் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில், பிறை பார்க்கும் குழு ஒவ்வொரு மாதமும் 29 ஆம் தேதி கூடி அடுத்த மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel