ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான பயண கட்டணமானது தற்போது மிகவும் குறைந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் துபாயிலிருந்து கேரளாவிற்கு ஒரு வழி டிக்கெட்டுகள் 155 திர்ஹம்ஸ் மற்றும் 220 திர்ஹம்ஸ் என்ற குறைந்த விலையில் தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கைகளின்படி, தற்போது துபாயிலிருந்து மும்பைக்கு 295 திர்ஹம்ஸ், கொச்சிக்கு 223 திர்ஹம்ஸ், திருவனந்தபுரத்திற்கு 250 திர்ஹம்ஸ், சென்னைக்கு 356 திர்ஹம்ஸ் மற்றும் பெங்களூருக்கு 422 திர்ஹம்ஸ் என ஒரு வழிக் கட்டணம் உள்ளது.
குறிப்பாக, கண்ணூருக்கு டிக்கெட் கட்டணம் 155 திர்ஹம்ஸ் ஆக இருந்தாலும், பயணிகள் அரிதாகவே உள்ளனர் என்று தெரிவிக்கும் பயண முகவர்கள், “பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இப்போது பயணிக்கவில்லை, எனவே பயண தேவை குறைந்துவிட்டது” என்றும் விளக்கமளித்துள்ளனர்.
இந்த சீசனில் குடும்பமாகப் பயணிப்பவர்கள் பயணிப்பதில்லை, இதனால் அமீரகத்திலிருந்து வெளியே செல்லும் பயணிகளின் தேவை குறைந்து விட்டது, இது விலைச் சரிவுக்கு முக்கிய காரணம் என்று பயண நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் தேவை வலுவாக உள்ளது, குறிப்பாக அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்களிடமிருந்து பயணத் தேவை அதிகமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
தற்போது அமீரகத்திலிருந்து வெளிச் செல்லும் பயணத் தேவை குறைந்தாலும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறைகள் முன்பதிவுகளில் அதிகரிப்பை தூண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபரில் தேவை மீண்டும் உயரும் என்று முகவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளிக்குப் பிந்தைய பயணத்திற்கான முன்னோக்கிய முன்பதிவுகள் ஏற்கனவே அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்
அபுதாபி வழித்தடங்களிலும் விலைக் குறைப்பு
பயணத் தேவை குறைவின் காரணமாக துபாயில் மட்டுமல்லாமல் அபுதாபியிலும் விமான கட்டணங்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை விமான நிறுவனங்கள் வழங்குகின்றன. இருப்பினும், தீபாவளிக்குப் பிந்தைய பயணக் கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மும்பை, பெங்களூரு, கொச்சி மற்றும் டெல்லி போன்ற இந்திய நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கான விமானக் கட்டணங்கள் ஏற்கனவே 1,500 திர்ஹம்ஸ் வரை அதிகரித்துள்ளன. இவ்வாறு சில பிரபலமான வழித்தடங்களில் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தென்னிந்திய வழித்தடங்கள் தொடர்ந்து சிறந்த சலுகைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel