துபாயில் மெட்ரோ நிலையத்திற்கு எதிரே உள்ள அல் நஹ்தா ஸ்ட்ரீட்டில், ஒரு வாகனம் திடீரென பாதையை விட்டு விலகி பேருந்து நிறுத்தத்தில் மோதியதால் ஏற்பட்ட கடுமையான விபத்து குறித்து துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், இருவரும் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்துத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் அவர்கள், திடீர் பாதை மாற்றங்கள் மற்றும் கவனக்குறைவு ஆகியவை கடுமையான விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளதாகவும், போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், பாதுகாப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தைப் பராமரிக்கவும், விபத்துகளைத் தவிர்க்க தங்கள் வாகனங்களின் சாலைத் தகுதியை தவறாமல் சரிபார்க்கவும் ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேசுகையில், செயல்பாட்டு அறைக்கு சம்பவம் குறித்து எச்சரிக்கை கிடைத்ததாகவும், உடனடியாக அந்த இடத்தைப் பாதுகாக்கவும் போக்குவரத்தை நிர்வகிக்கவும் ரோந்துப் படைகளை அனுப்பியதாகவும் விவரித்துள்ளார். மேலும், போக்குவரத்து விபத்துத் துறையின் நிபுணர்களும் விபத்து நடந்த இடத்திற்கு தொழில்நுட்ப விசாரணையை மேற்கொள்ள வந்தனர், அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் குழுக்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக நகரின் பரபரப்பான அல் நஹ்தா ஸ்ட்ரீட்டில் தற்காலிக இடையூறு ஏற்பட்ட நிலையில், காவல்துறை ரோந்துப் பணியாளர்கள் நெரிசலைக் குறைக்க வாகனங்களை மாற்றுப் பாதைகளுக்கு விரைவாகத் திருப்பிவிட்டதாகவும் அதிகாரம் தெரிவித்துள்ளது.
பஸ் நிறுத்தங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் போன்ற நெரிசலான பகுதிகளுக்கு அருகில், பாதசாரிகளின் பாதுகாப்பு மிகவும் ஆபத்தில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று துபாய் காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel