இந்தியாவின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அதன் உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு சர்வதேச பள்ளி வாரியத்தை அமைக்கத் தயாராகி வருவதாக இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செப்டம்பர் 11, வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சர், CBSE புதிதாக ஒரு புதிய சர்வதேச வாரியத்தை (International Board) தொடங்குவதாகவும், அமீரகம் உட்பட உலகளவில் சர்வதேச பாடத்திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பாடத்திட்டத்தின் கீழ் 109 பள்ளிகள் இயங்கி வருவதாகவும், அவை இப்போது CBSE பிராந்திய அலுவலகம் மற்றும் சிறப்பு மையத்தால் மேற்பார்வையிடப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். கூடுதலாக, அமீரகத்தில் உள்ள 12 CBSE பள்ளிகள் இந்தியாவின் அடல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Lab- ATL) இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் பிரதான் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘Atal Innovation Mission’ என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ATL ஆய்வகங்கள், STEM பாடங்களை (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை) ஆராய்வதற்கான நேரடி தளத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றன. 3D பிரிண்டர்ஸ், ரோபாட்டிக்ஸ் கருவிகள் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த ஆய்வகங்கள், மாணவர்கள் நிஜ உலக தீர்வுகளை வடிவமைக்கவும், புதுமை, கிரியேட்டிவிட்டி மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கவும் ஊக்குவிக்கின்றன என்றும் அவர் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, இந்த ஆய்வகங்கள் சுயநிதி (self-financing) மாதிரியில் செயல்படும், ஆனால் அரசாங்க நெறிமுறைகளின் கீழ் செயல்படும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சர் தனது வருகையின் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள CBSE பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் மூத்த கல்வித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வின் போது, ஆண்டுதோறும் செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்படும் இந்தியாவின் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள், கல்வியாளர்களையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் விழா ஆகியவை இடம்பெற்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel