ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநரான du அதன் அடுத்த தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பமான 5G+ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு தற்போதைய 5G இன் இரண்டு மடங்கு வேகத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெளியீடு மொபைல் இணைப்பை மாற்றுவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதோடு, வேகமான பதிவிறக்கங்கள், குறைந்த தாமதம் மற்றும் பொழுதுபோக்கு முதல் நிறுவன பயன்பாடுகள் வரை அனைத்திற்கும் மென்மையான செயல்திறன் கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜுமேரா பேவில் உள்ள ‘Bvlgari Resort’இல் நடைபெற்ற இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வின் போது பேசிய du இன் தலைமை வணிக அதிகாரி கரீம் பென்கிரானே, “5G+ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அனுபவத்தை உயர்த்துவதாகும், இது மிகவும் வேகமான கேமிங், தடையற்ற ஸ்ட்ரீமிங்கை செயல்படுத்துகிறது மற்றும் AI-மூலம் இயக்கப்படும் பயன்பாடுகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் சகாப்தத்தில், இந்த நெட்வொர்க் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் இரண்டிற்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பம் ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகின்றது. அத்துடன் இது ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், நிலைத்தன்மை இலக்குகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
5G+ இன் அம்சங்கள்
- தற்போதுள்ள 5G உடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு வேகம்.
- குறைந்த தாமதம், கேமிங், VR/AR மற்றும் AI பயன்பாடுகளுக்கு நிகழ்நேர பதிலை உறுதி செய்தல்.
- ஸ்டேடியங்கள் அல்லது இசை நிகழ்ச்சிகள் போன்ற நெரிசலான இடங்களில் கூட தடையற்ற இணைப்பு.
- நிகழ்நேர மொழிபெயர்ப்பு, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் அதி தெளிவான வீடியோ கால் போன்ற AI-மூலம் இயங்கும் சேவைகளுக்கான ஆதரவு.
இந்த அறிவிப்பு, ஆப்பிளின் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்ட அதே நாளில் அறிவிக்கப்பட்டது. ஆப்பிளின் புதிய சாதனங்களுக்கு இந்த தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும் என்றும் கரீம் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆப்பிள் சாதனங்களை அதன் 5G+ நெட்வொர்க்குடன் இணைக்கும் பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் வேகமான 5G பதிவிறக்க வேகம் உள்ள நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, நாட்டின் உள்ள மொத்த மக்கள்தொகையில் 99% மக்கள் ஆன்லைனில் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது, இது உலகளவில் மிக உயர்ந்த சதவீதம் ஆகும். அந்தவகையில், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டதால் அவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும், அவர்களின் சாதனங்கள் சரியாக, நம்பகத்தன்மையுடன், தடையின்றி மற்றும் சமரசம் இல்லாமல் செயல்படுவதை உறுதிசெய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நெட்வொர்க்கை du உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel