துபாயின் உலகப் புகழ்பெற்ற துபாய் ஃபவுன்டைன் ஆனது, ஐந்து மாதங்களாக புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து, வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி அதன் பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இது தினசரி நிகழ்ச்சிகளின் முழு அட்டவணையுடன் செயல்படும் என்பதை அதன் டெவலப்பர் நிறுவனமான எமார் உறுதிப்படுத்தியுள்ளது:
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, பிற்பகல் நிகழ்ச்சிகள் வார நாட்களில் மதியம் 1 மணி மற்றும் 1.30 மணியிலும், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி மற்றும் 2.30 மணியிலும் நடைபெறும். அதேபோன்று மாலை நிகழ்ச்சிகள் மாலை அனைத்து நாட்களிலும் 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை நடைபெறும் என்பதும் தெரியவந்துள்ளது.
புதுப்பித்தல் பணிகள்
புதுப்பித்தல் பணிகளின் முதல் கட்டத்தில், புதிய டைல்ஸ் பதித்தல், மேம்படுத்தப்பட்ட நீர் இன்சுலேஷன் மற்றும் புதிய பெயின்ட் அடித்தல் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, முழுமையாக முடிக்கப்பட்டுள்ள முதல் கட்டப் பணிகள் நீரூற்றின் சின்னமான தோற்றத்தைப் பாதுகாத்து அதன் ஆர்ப்பரிக்கும் நிகழ்ச்சியை பாதுகாப்பாகவும் கண்கவர்தாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
இரண்டாம் கட்டத்தை பொறுத்தவரை, அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் உலகளவில் புகழ்பெற்ற நீர், ஒளி மற்றும் இசை காட்சிகளை மேலும் மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட புதுமையான புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் பிரபலமான இந்த ஃபவுன்டைன் ஷோ ஐந்து மாத மூடலுக்குப் பிறகு, மீண்டும் திறக்கப்படுவது ஏற்கனவே சமூக ஊடகங்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அமீரகத்திற்கு தற்போது விசிட்டில் வர திட்டமிட்டுள்ளவர்களும் முதல் நாளில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். எனவே, முதல் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel