துபாயில் சுமார் 200,000 திர்ஹம் மதிப்புள்ள காசோலை மற்றும் பணத்தைக் கொண்ட தொலைந்து போன பணப்பையை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இஸ்ஸா அப்பாஸ் முஹம்மது அப்துல்லா என்ற அந்த நேர்மையான மாணவர், தனது பகுதியில் நிறைய பணம் மற்றும் காசோலையுடன் ஒரு வாலட் கிடப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த இஸ்ஸா, அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கக் கோரியிருக்கிறார்.
மாணவரின் நேர்மையான நடத்தை காவல்துறையை வெகுவாக ஈர்த்தது, இதையடுத்து, அல் குசைஸ் காவல் நிலைய அதிகாரிகள் மாணவரின் வகுப்பு தோழர்கள் முன்னிலையில் அவருக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகள் இஸ்ஸாவை குடிமைப் பொறுப்புக்கான ஒரு முன்மாதிரியாகக் கருதுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர், அவரது நேர்மையான நடவடிக்கை பணப்பையையும் பணத்தையும் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தருவதை உறுதி செய்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட இஸ்ஸா, அதிகாரசபைக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இது தனது சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு பெருமை மற்றும் மறக்கமுடியாத தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து பேசிய அல் குசைஸ் காவல் நிலையத்தின் துணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் அஹ்மத் அல் ஹஷேமி, இந்த கௌரவம் “We Reach You to Thank You” முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும், இது சமூக உறுப்பினர்களை அவர்களின் சொந்த இடங்களிலும் அவர்களது சக ஊழியர்களிடமும் கௌரவிக்கிறது என்றும் விவரித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel