துபாய் முனிசிபாலிட்டி எமிரேட்டின் தூய்மையான நகர்ப்புற தோற்றத்தை பராமரிக்க தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது, இதன் விளைவாக 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1,387 கைவிடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. அதே காலகட்டத்தில், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பகுதிகளில் 6,187 வாகனங்களை அகற்றுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒரு அறிக்கையில், “துபாயின் அழகியல் ஈர்ப்பைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், நகர்ப்புற தூய்மையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கும் எங்கள் தொடர்ச்சியான பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் உள்ளன” என்று குடிமை அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் கழிவு செயல்பாட்டுத் துறையின் இயக்குனர் சயீத் அப்துல் ரஹீம் சஃபர் அவர்கள் பேசிய போது, உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் தெருக்களில் கைவிடப்பட்ட வாகனங்கள் அதிகாரசபைக்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், “எங்கள் களக் குழுக்கள் சாலைகளில், பொது வாகன நிறுத்துமிடங்களில் அல்லது மணல் பகுதிகளில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட வாகனங்களைக் கண்காணித்து அகற்ற ஆண்டு முழுவதும் செயல்படுகின்றன,” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் கைவிடப்பட்ட வாகன வழக்குகளில் 77.6 சதவீதம் நேர்மறையான முறையில் தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், “இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த கூட்டாண்மைகளையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என்றும் உறுதியளித்துள்ளார்.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
கைவிடப்பட்ட கார்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் சேதங்களைப் புரிந்துகொள்ள குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிக்கலைத் தடுக்க முனிசிபாலிட்டி பல சமூக விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. துபாயை சுத்தமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருப்பதில் அரசாங்கம், குடியிருப்பாளர்கள் மற்றும் தனியார் கூட்டாளர்களுக்கு இடையே பகிரப்பட்ட பொறுப்பின் முக்கியத்துவத்தை இந்த பிரச்சாரங்கள் வலியுறுத்துகின்றன.
வாகனத்தை அகற்றும் செயல்முறை
எமிரேட்டின் சாலைகளில் முறையான பராமரிப்பில்லாத ஒரு வாகனம் அடையாளம் காணப்பட்டவுடன், ஆய்வாளர்கள் அதன் விவரங்களை ஒரு ஸ்மார்ட் அமைப்பில் பதிவு செய்து அதன் உரிமையாளருக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகிறார்கள், அதன் நிலை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து, உரிமையாளருக்கு மூன்று முதல் 15 நாட்கள் வரை செயல்பட அவகாசம் அளிக்கிறார்கள். துபாயில் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அமைப்பு வழியாக SMS எச்சரிக்கைகளையும் பெறுகிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், ‘Emirates Parking’ உடன் ஒருங்கிணைந்து வாகனம் அகற்றப்பட்டு அல் அவீரில் உள்ள ஒரு இடத்துக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வாகனங்களை வழக்கமான சுத்தம் செய்தல், பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்துதல் மற்றும் மணல் அல்லது வெறிச்சோடிய நிலங்களைத் தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகள் வாகனங்களையும் நகரத்தின் தோற்றத்தையும் பாதுகாக்க உதவும் என்றும், குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில், நீண்ட நேரம் கார்களை கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்றும் துபாய் முனிசிபாலிட்டி குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel