துபாயைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், விமானத்தில் பவர் பேங்குகளை எடுத்துச் செல்வதற்கான புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது. விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த விமானத்திற்குள் பவர் பேங்குகளை பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படும் என்ற விமான நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நினைவூட்டல் வந்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, வருகின்ற புதன்கிழமை முதல், பயணிகள் இனி விமானப் பயணங்களின் போது பவர் பேங்குகளைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். எமிரேட்ஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புதுப்பிப்பின்படி, பயணிகள் கேபின் லக்கேஜ்களில் ஒரே ஒரு பவர் பேங்கை மட்டுமே எடுத்துச் செல்லலாம். மேலும், சாதனம் அணைக்கப்பட்டு இருக்கைக்கு அடியில் அல்லது இருக்கை பாக்கெட்டில் சேமிக்கப்பட வேண்டும். செக்-இன் பைகளில் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
இது குறித்து தெரிவிக்கையில் பாதுகாப்பு மதிப்பாய்வைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த அல்லது அதிக சார்ஜ் செய்யப்பட்ட லித்தியம் பேட்டரிகள் தெர்மல் ரன்அவே எனப்படும் ஒரு நிலைக்கு மாறலாம். இதனால் அதிகப்படியான வெப்பம் குவிந்து தீ, வெடிப்புகள் அல்லது நச்சு வாயு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். புதிய விதிகள் அத்தகைய அபாயங்களைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாக உள்ளன என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் பயணிகளுக்கான முக்கிய விதிகள்:
- ஒரு பயணிக்கு ஒரு பவர் பேங்க் (100Wh வரை).
- கேபின் பேக்கேஜில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
- விமானத்தின் போது பயன்படுத்தவோ அல்லது ரீசார்ஜ் செய்யவோ முடியாது.
- பவர் பேங்கின் திறன் மதிப்பீட்டைக் காட்ட வேண்டும்.
- மேல்நிலை லாக்கர்கள் மற்றும் செக்-இன் லக்கேஜ்களில் வைப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
பிற சாதனங்களுக்கான விதிமுறைகள்
எமிரேட்ஸ் பயணிகள் லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் உட்பட 15 தனிப்பட்ட மின்னணு சாதனங்களை (PEDகள்) தனித்தனியாக பேக் செய்யப்பட்டிருந்தால், எடுத்துச் செல்லலாம் என்பதையும் நிறுவனம் நினைவூட்டியுள்ளது. அதேநேரத்தில், ஸ்மார்ட் பைகள் (smart bags), ஹோவர்போர்டுகள் (hoverboards) மற்றும் மினி செக்வேஸ் (mini Segways) போன்ற மோட்டார் பொருத்தப்பட்ட சாதனங்கள் அவற்றின் பெரிய லித்தியம் பேட்டரிகள் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
எதிஹாட் தெளிவுபடுத்தல்
இதற்கிடையில், எதிஹாட் ஏர்வேஸ் புளூடூத் ஸ்பீக்கர்கள் தொடர்பான விதிகளையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்பீக்கர்கள் மின்சாரம் அணைக்கப்பட்டு சேதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தால்,கேபின் மற்றும் செக்-இன் லக்கேஜ்கள் இரண்டிலும் அனுமதிக்கப்படுகின்றன என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. இருப்பினும், உதிரி பேட்டரிகள், இ-சிகரெட்டுகள் மற்றும் பவர் பேங்க்குகள் செக்-இன் பைகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பயணிகள் பயணம் செய்வதற்கு முன் விமான நிறுவனத்தின் வலைத்தளங்களில் சமீபத்திய லக்கேஜ் மற்றும் ஆபத்தான பொருட்கள் கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் விதிமுறைகள் விமான நிறுவனங்கள் மற்றும் சேருமிடங்களை பொறுத்து மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel