துபாயில் பணிபுரிய வேண்டும் என்று கனவு காண்கிறீர்களா? அப்படியானால், இது உங்களுக்கான வாய்ப்பாக இருக்கலாம். துபாயை தளமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் குழுமம் அடுத்த நிதியாண்டில் 350 வெவ்வேறு பணிகளில் 17,300 புதிய ஊழியர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, மேலும், அதற்கான ஒரு மிகப்பெரிய உலகளாவிய ஆட்சேர்ப்பு இயக்கத்தையும் அறிவித்துள்ளது.
கேபின் பணியாளர்கள், விமானிகள், பொறியாளர்கள், வணிகம் மற்றும் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, ஐடி, மனிதவளம், ஃபைனான்ஸ், கேட்டரிங் மற்றும் தரை கையாளுதல் (ground handling) போன்ற அனைத்து வகையான பணிகளுக்கும் அடுத்த நிதியாண்டிற்குள் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதன் dnata நிறுவனம், சரக்கு, கேட்டரிங் மற்றும் தரை கையாளுதலில் அதன் செயல்பாடுகளை வலுப்படுத்த 4,000 க்கும் மேற்பட்ட நிபுணர்களை நியமிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு நிகழ்வுகள்
இந்த விரிவாக்கத்தை ஆதரிக்க, தற்போதைய மற்றும் எதிர்கால விமானிகளுக்கு பயிற்சி அளிக்க எமிரேட்ஸ் ஒரு புதிய அதிநவீன விமானக் குழு பயிற்சி மையத்தைத் திறந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், விமான நிறுவனம் 3 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள கேபின் பணியாளர் மண்டலத்தையும் திறந்தது.
இதுவரை வெளியான அறிக்கைகளின் படி, அடுத்த 12 மாதங்களில், இந்தக் குழு உலகளவில் 150 நகரங்களில் 2,100 க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு நிகழ்வுகளை நடத்தும். துபாயை தளமாகக் கொண்ட நிகழ்வுகளில் UAE தேசிய மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் சலுகைகள்
- கேபின் குழு: மாதத்திற்கு 10,170 திர்ஹம்ஸ் (சராசரி மொத்த ஊதியம்)
- டைரக்ட் என்ட்ரி கேப்டன்: வருடத்திற்கு 481,200 திர்ஹம்ஸ்
- அக்சிலரேட்டட் கமாண்ட் கேப்டன்: வருடத்திற்கு 443,940 திர்ஹம்ஸ்
- முதல் அதிகாரி: வருடத்திற்கு 382,080 திர்ஹம்ஸ்
சம்பளம் மட்டுமின்றி, எமிரேட்ஸ் ஊழியர்கள் ஏவியேஷன் தொழில்துறையில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை அனுபவிக்கின்றனர்:
- வரி இல்லாத சம்பளம்
- 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பார்க்க பயணச் சலுகைகள்
- தங்குமிடம் அல்லது நிறுவனம் வழங்கும் வீட்டுவசதி (பணியைப் பொறுத்து)
- 2025 இல் வழங்கப்பட்ட 22 வார சம்பளம் உட்பட தாராளமான போனஸ்கள்
2022 முதல், 41,000 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஏற்கனவே குழுவில் சேர்ந்துள்ளனர். இருப்பினும், போட்டி கடுமையாகவே உள்ளது என்றும், கடந்த ஆண்டு மட்டும், எமிரேட்ஸ் 3.7 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் கூறியுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் & குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள், இந்த பணியமர்த்தல் உத்தி துபாயின் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 மற்றும் விமான நிறுவனத்தின் வளர்ச்சி லட்சியங்களுடன் ஒத்துப்போகிறது என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel