ADVERTISEMENT

6 மாதங்களில் 1.1 பில்லியன் திர்ஹம் லாபத்தை பதிவு செய்துள்ள எதிஹாட் ஏர்வேஸ்!!

Published: 4 Sep 2025, 1:39 PM |
Updated: 4 Sep 2025, 1:39 PM |
Posted By: Menaka

அபுதாபியை தளமாகக் கொண்டு செயல்படும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 1.1 பில்லியன் திர்ஹம் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 32 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த விமான நிறுவனம் நடப்பாண்டின் முதல் பாதியில் சுமார் 10.2 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றதாக அறிவித்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அதன் மொத்த வருவாய் 16 சதவீதம் அதிகரித்து 13.5 பில்லியன் திர்ஹம்ஸாகவும், பயணிகள் வருவாய் 11.3 பில்லியன் திர்ஹம்ஸை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது அதிக தேவை, செயல்திறன் ஆதாயங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட உலகளாவிய நெட்வொர்க்கால் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சாதனை முடிவுகள் குறித்து பேசிய எதிஹாட் ஏர்வேஸின் தலைமை நிர்வாக அதிகாரி அன்டோனால்டோ நெவ்ஸ், விமான நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 15–16% வளர்ச்சியடைந்து வருகிறோம், மேலும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி இன்னும் வலுவாக இருக்கும், இந்த ஆண்டு விமான நிறுவனம் சுமார் 21.7 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும்” என்று கணித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே, தொழில்துறை வல்லுநர்கள் விமான நிறுவனத்தின் சாதனை லாபத்தையும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 27 புதிய வழித்தடங்கள் ஆகியவற்றையும் பாராட்டியதாக அறிக்கைகள் கூறுகின்றன. எதிஹாட்டின் வளர்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட கவனம், மேம்படுத்தப்பட்ட கேபின்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட விமானக் குழு ஆகியவை அதன் மறுமலர்ச்சியைத் தூண்டுகின்றன என்று ஆய்வாளர் சஜ் அஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், எதிஹாட் தனது பணியாளர்களை விரிவுபடுத்துகிறது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 1,700 புதிய பணியாளர்களை பணியமர்த்தியதாகவும் (100 விமானிகள் மற்றும் 1,000 கேபின் பணியாளர்கள் உட்பட) 1,100 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகளை வழங்கியதாகவும் எதிஹாட் தலைவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தாண்டின் இறுதியில் விமான நிறுவனம் 21 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தைப் பொறுத்தவரை, வலுவான தேவை மற்றும் அபுதாபியின் நேர்மறையான வணிகச் சூழலைப் பொறுத்து, 2026 ஆம் ஆண்டில் 24–25 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் நெவ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel