துபாயில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் எமிரேட்ஸ் சாலையில் மூன்று வாகனங்கள் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்தனர் என்றும் துபாய் காவல்துறை இன்று (புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு கார் மற்றும் ஒரு மினி டிரக்கின் நொறுங்கி சேதமடைந்திருப்பதைக் காட்டும் ஒரு படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அமீரக நேரப்படி, பிற்பகல் 1:30 மணியளவில் ஷார்ஜாவை நோக்கிச் செல்லும் துபாய் கிளப் ப்ரிட்ஜ்க்குப் பின் நடந்த இந்த விபத்து, ஒரு ஓட்டுநர் முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கத் தவறியதால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது, இத்தகைய மீறல் பெரும்பாலும் ஆபத்தான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்துத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் ஜுமா சேலம் பின் சுவைதான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், முதற்கட்ட விசாரணைகள் டெயில்கேட்டிங் விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். “வாகனங்களுக்கு இடையே போதுமான தூரம் விட்டுச் செல்லாதது கடுமையான அல்லது ஆபத்தான விபத்துகளுக்கு வழிவகுக்கும். பாதுகாப்பான தூரம் என்பது வாகனம் ஓட்டுதலின் ஒரு முக்கிய விதி” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
துபாயில் மிகவும் பொதுவான விபத்துக்களில் டெயில்கேட்டிங்கின் காரணமாக ஏற்படும் பின்புற மோதல்கள் உள்ளன என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த விதியை பின்பற்றாதவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின் கீழ் நான்கு பிளாக் பாயின்ட்ஸ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, RoadSafetyUAE,UAE சாலைகளில் மூன்றாவது பெரிய மீறலாக டெயில்கேட்டிங்கை அடையாளம் கண்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் “மூன்று வினாடி விதியை” பின்பற்றுமாறு அது வலியுறுத்துகிறது. அதாவது முன்பக்க வாகனத்திற்குப் பின்னால் குறைந்தது மூன்று வினாடிகள் இடைவெளியை கடைபிடிக்குமாறும், மோசமான வானிலை அல்லது குறைந்த தெரிவுநிலை நிலைகளில் இதை ஐந்து வினாடிகளாக நீட்டிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய மாதங்களில் அதிகாரிகள் இந்த விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெயில்கேட் செய்பவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க ரேடார்களை நிறுத்துவதாக துபாய் காவல்துறை அறிவித்தது, அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களின் வாகனங்கள் 30 நாட்கள் வரை பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel