ADVERTISEMENT

அமீரகத்தில் 5 இலட்சம் திர்ஹம்சிற்கு விற்கப்பட்ட ஒட்டகம்..!!

Published: 3 Sep 2025, 12:42 PM |
Updated: 3 Sep 2025, 1:02 PM |
Posted By: Menaka

மத்திய கிழக்கின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வான அபுதாபி சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியின் (ADIHEX-Abu Dhabi International Hunting and Equestrian Exhibition) ஒரு பகுதியாக கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற ஒட்டக ஏலத்தில் 500,000 திர்ஹம்ஸ்க்கு ஏலம் விடப்பட்ட ஒரு ஒட்டகக் கன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக ஒட்டக ஏலங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் மதிப்புமிக்க கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும், அவை மில்லியனர்கள், அனுபவம் வாய்ந்த வளர்ப்பாளர்கள் மற்றும் ஒட்டக பந்தய விளையாட்டில் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வலர்கள் போன்றோரை ஈர்க்கின்றன. அங்கு ஏலதாரர்கள் பெரும்பாலும் லட்சக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான திர்ஹம்ஸ் பணத்தை செலவு செய்து ஒட்டகங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

இந்நிலையில் முந்தைய ஏலங்களில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய நன்கு அறியப்பட்ட போட்டியாளரான முகமது அல் மென்ஹாலி என்பவர்தான் இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற ஏலதாரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கடுமையான ஏலப் போரில் நுழைவதற்கு முன்பு, அவர் முதல் ஒட்டகத்தை 140,000 திர்ஹம்ஸ்க்கும், மற்றொரு ஒட்டகத்தை 90,000 திர்ஹம்ஸ்க்கும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

அவருக்குப் போட்டியாக, முபாரக் பின் பிகெய்த் அல் ஷம்சி என்ற ஏலதாரர், ஏலத்தை 40,000 திர்ஹம்ஸிலிருந்து 100,000 திர்ஹம்ஸாக உயர்த்தியபோது இருவருக்கும் இடையேயான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியது. அங்கிருந்து, இருவருமே பின்வாங்க மறுத்ததால் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இறுதியாக, அல் மென்ஹாலி 500,000 திர்ஹம்ஸ்க்கு ஒப்பந்தம் செய்து, ஒரு ஒட்டகக் கன்றை வென்றுள்ளார்.

தனது வெற்றிக்குப் பிறகு பேசிய அல் மென்ஹாலி, “சிறந்த திறமையான இனங்களுக்கு மட்டுமே அதிக ஏலம் போவதை நீங்கள் காண்பீர்கள். இந்த ஒட்டகத்தின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது, எனவே நான் இந்த ஒட்டகத்தை ஏலத்தில் எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே எத்தனை ஒட்டகங்களை வைத்திருக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, நிறைய ஒட்டகங்கள் இருக்கின்றன என்று அவர் பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

மொத்தமாக, இந்த ஏலத்தில் 15 ஒட்டகங்கள் 1.77 மில்லியன் திர்ஹாம்களுக்கு விற்கப்பட்டன என்றும், இதில் அனுபவம் வாய்ந்த உரிமையாளர்கள் முதல் லட்சிய இளம் போட்டியாளர்கள் வரை ஏலதாரர்கள் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இது போன்ற ஏலங்கள் விலங்குகளை வாங்குவது மற்றும் விற்பது மட்டுமல்ல, அவை பாரம்பரியம், பெருமை மற்றும் போட்டியை பிரதிபலிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel