ADVERTISEMENT

UAE: ‘டியர் பிக் டிக்கெட்’ சீசன் 3 இல் 100,000 திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்கள்: தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும் வெற்றியாளராக தேர்வு..!!

Published: 24 Sep 2025, 8:22 PM |
Updated: 24 Sep 2025, 8:30 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ‘டியர் பிக் டிக்கெட் சீசன் 3’ இன் வெற்றியாளர்களாக அமீரகத்தில் வசிக்கும் ஆறு குடியிருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் அவர்களின் மனமார்ந்த விருப்பங்களை நிறைவேற்ற 100,000 திர்ஹம்ஸ் பரிசும் பிக் டிக்கெட் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பிக் டிக்கெட்டின் வழக்கமான ரேஃபிள் டிராக்களைப் போல் அல்லாமல் நடத்தப்பட்ட இந்த சிறப்பு பிரச்சாரம், சுகாதாரம் & நல்வாழ்வு, கல்வி, வீட்டுவசதி & தங்குமிடம், வணிகம் & தொழில்முனைவோர் மற்றும் குடும்ப சந்திப்பு என ஐந்து பிரிவுகளில், தங்களின் சொந்த கதைகளை சமர்ப்பிக்கும் வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கு வழங்கியது. இது வாழ்க்கையை மாற்றும் அவர்களின் விருப்பம் மற்றும் கனவுகளை நிஜமாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த நிலையில், கதை சமர்ப்பிப்பானது பல வாரங்களாக நடைபெற்று வந்தது. பின்னர் இறுதியாக பொது வாக்களிப்புக்குப் பிறகு ஆறு ஊக்கமளிக்கும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்

வெற்றி பெற்ற ஆறு நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது கஜோல் ஸ்ரீ ரவிச்சந்திரன் என்ற மாணவியும் ஒருவர் ஆவார். இவர் 2002 முதல் ஷார்ஜாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது பரிசுத் தொகையை AI மற்றும் சைபர் செக்யூரிட்டியில் தனது படிப்பைத் தொடரவும் அதே வேளையில் தனது பெற்றோருக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக கேரளாவைச் சேர்ந்த 35 வயது மஞ்சு ஜோஸ் என்பவர், இந்த வெற்றியை வாழ்க்கையை மாற்றும் வெற்றி என்று தெரிவித்துள்ளார். நிதி சிக்கல்களால் தனது மகளை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான நிலையில், தற்போது கிடைத்த பரிசுத்தொகை தனது மகளுடன் மீண்டும் ஒன்றிணைந்து ஆன்லைனில் தொழிலைத் தொடங்க உதவும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மற்றொரு இந்திய வெற்றியாளரான வினீதா ஷிபு குமார் என்பவர், கல்வி ஆதரவு பிரிவின் கீழ் தனது விருப்பத்தை சமர்ப்பித்த நிலையில், பரிசுத் தொகையை வென்றுள்ளார். அவரது மகனுக்கு தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவதால், இந்த பரிசுத்தொகை அவரது மகனிற்கு உள்ளூர் கல்வி வாய்ப்புகளை ஆராயவும், அவரது பாதுகாப்பு மற்றும் சுகாதார அணுகலை உறுதிசெய்யவும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற வெற்றியாளர்களில் உகாண்டாவைச் சேர்ந்த வெரோனிகா இம்மாகுலேட் ஆங்வென், எகிப்தைச் சேர்ந்த எஸ்லாம் ஷஃப்ஷாக் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அலெஜாண்ட்ரா புரா ஃபோட்ரா ஆகியோர் அடங்குவர், ஒவ்வொருவரும் குடும்பத்துடன் இணைவது மற்றும் தனிப்பட்ட நெகிழ்ச்சியான சொந்த கதைகளை பகிர்ந்து பரிசுத்தொகையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel