கத்தார் தலைநகரான தோஹாவில் இன்று பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக செய்தி ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினர்கள் வசிக்கும் கட்டாரா மாவட்டத்தில் குண்டுவெடிக்கும் சத்தம் மற்றும் புகை எழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ISA) ஒரு அறிக்கையை வெளியிட்டது, இந்த நடவடிக்கை ஹமாஸின் மூத்த தலைமையை இலக்காகக் கொண்டது என்றும், அவர்கள் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதாகவும், இஸ்ரேல் அரசுக்கு எதிரான போரை வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், “தாக்குதலுக்கு முன்னர், துல்லியமான வெடிமருந்துகள் மற்றும் கூடுதல் உளவுத்துறை பயன்பாடு உட்பட பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்கைத் தணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அக்டோபர் 7 படுகொலைக்கு காரணமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்க IDF மற்றும் ISA உறுதியுடன் தொடர்ந்து செயல்படும்” என்று வலியுறுத்தியுள்ளது.
கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இஸ்ரேலால் ஹமாஸ் தலைவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதை உறுதிப்படுத்திய செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜீத் அல் அன்சாரி, உயர் மட்டத்தில் விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்க குடிமக்களுக்கு தங்குமிடம் வழங்கும் உத்தரவை தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி கூறுகின்றன. இஸ்ரேலின் ஆயுதப்படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதே நேரத்தில் சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சித்தன. இரண்டு தற்காலிக போர்நிறுத்தங்கள் எட்டப்பட்டிருந்தாலும், போருக்கு நீடித்த முடிவை எட்டுவதில் இழுபறி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel