உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாழ்வதற்கும் தொழில் புரியவும் ஏற்ற இடத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தற்கு தொடர்ந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமீரகத்தில் பல்வேறு எமிரேட் இருந்தாலும் சமீப காலமாக ராஸ் அல் கைமா எமிரேட்டானது ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஹாட்ஸ்பாட்டாக வேகமாக மாறி வருகிறது என கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் துபாயை ஒப்பிடுகையில் குறைந்த வாழ்க்கைச் செலவுகள், மெதுவான வாழ்க்கை வேகம் மற்றும் எமிரேட்டின் இயற்கை சூழல் ஆகியவற்றின் காரணமாகவும், துபாயின் வசதிகளை எளிதாக அணுகக் கூடிய தூரத்தில் இருப்பதாலும் அதிகளவிலான துபாய் குடியிருப்பாளர்கள் ராஸ் அல் கைமாவிற்கு குடிபெயரும் போக்கு நாளுக்குநாள் அதிகரிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த செலவுகள், அதிக மதிப்பு
ராஸ் அல் கைமாவுக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து தனிப்பட்ட மற்றும் வணிக செலவுகள் இரண்டும் கணிசமாகக் குறைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். வீட்டுவசதி முதல் உணவு வரை துபாய் அல்லது அபுதாபியை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த மதிப்பை வழங்குவதாகவும் அங்கு இடம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இது ராஸ் அல் கைமாவை குடும்பங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
இயற்கை அழகு மற்றும் வெளிப்புற வாழ்க்கை முறை
ராஸ் அல் கைமாவின் அழகான கடற்கரைகள், கரடுமுரடான மற்றும் உயரமான ஜெபல் ஜெய்ஸ் மலைகள் ஆகியவை மக்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. கடற்கரையில் காலை நடைப்பயணங்கள், சூரிய மறைவில் மலையேற்றங்கள், கரையில் ஆமைகள் போன்ற வனவிலங்குகளைப் பார்ப்பது ஆகியவை பெரிய நகரங்களில் அரிதான அமைதியையும் தொடர்பையும் தருவதாக புதிதாகக் குடியேறியவர்கள் கூறுகிறார்கள்.
குறைந்த மன அழுத்தம், அதிக இடம்
இவற்றுடன் ராஸ் அல் கைமா எமிரேட்டில் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் நெரிசல் இல்லாதது ஆகும். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், நவீன வீடுகள் மற்றும் திறந்தவெளிகள் அன்றாட வாழ்க்கையை மென்மையாக்குகின்றன என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும் குடியிருப்பாளர்கள் ராஸ் அல் கைமாவின் வலுவான உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டுகின்றனர், ஏராளமான ஜிம்கள், ஆரோக்கியமான உணவு விருப்பங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், ராஸ் அல் கைமாவில் விரைவில் வரவிருக்கும் வின் அல் மர்ஜன் ஐலேண்ட் ரிசார்ட் மற்றும் கேசினோ திட்டம் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்கள், அடுத்த சில ஆண்டுகளில் எமிரேட்டை மேலும் மாற்றும் என்றும், புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் அதே வேளையில் அதன் வாழ்க்கை முறை மற்றும் வணிக இடமாக ராஸ் அல் கைமா தனது ஈர்ப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel