துபாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீப காலமாக பாம்புகள் நடமாடுவதாக கவலை தெரிவித்துள்ளனர். துபாயின் ரெம்ராம் (Remraam) சமூகத்தில் வசிப்பவர்கள் கட்டிட வளாகங்களிலும் அதைச் சுற்றியும் பாம்புகள் காணப்பட்டதைத் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளனர், இதனால் குடும்பங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரெம்ராமின் தாமம் கிளஸ்டரில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தனது குழந்தைகளிடம் பாம்பு குறித்து ஏற்கனவே எச்சரித்ததாகக் கூறியுள்ளார். “அவர்கள் பெரும்பாலும் வெளியே பந்து விளையாடுகிறார்கள், அது புதர்களில் விழுந்தால், அதை எடுக்க ஓடுகிறார்கள். அந்தப் பகுதியில் பாம்புகள் காணப்படுவதாகவும், அவை புதர்களிலும் மறைந்திருக்கலாம் என்றும் நான் அவர்களை எச்சரித்தேன். ஏதாவது மீட்டெடுக்க வேண்டியிருந்தால் ரப்பர் கையுறைகளை அணியுமாறும் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, அருகிலுள்ள அல் ராம்த் கிளஸ்டரில் (Al Ramth cluster) வசிக்கும் பலர் பாம்புகளைப் பார்த்ததாகப் புகாரளித்தனர். சில பாதிப்பில்லாத விரியன் பாம்புகள் அடுக்குமாடி குடியிருப்பு கதவுகளுக்கு அருகில் காணப்பட்டதாகவும், மற்ற பாம்புகள் அடிக்கடி பால்கனிகளில் தோன்றியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், குடியிருப்பாளர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் விஷப் பாம்புகள் வீடுகளுக்கு அருகே சுருண்டும், நெளிந்தும் செல்வதைக் காட்டுகின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, துபாய் முனிசிபாலிட்டி (DM) ஒரு சிறப்பு தொழில்நுட்பக் குழு ஒரு பாம்பை பிடித்துச் சென்றிருப்பதாகவும், சமூகம் முழுவதும் பாம்பு பொறிகள் மற்றும் விரட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. “பொதுமக்களின் கவலைகளைப் போக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,” என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ரெம்ராமில் ஒன்பது ஆண்டுகளாக வசித்து வரும் நீண்டகால குடியிருப்பாளர் ஒருவர், இதுபோன்ற ஒரு பிரச்சினையை சந்திப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளாரர். அவர், “இங்கு இதற்கு முன்பு பாம்புகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது, சமூகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பாம்புகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக பலர் நம்புகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவது போலவே, கட்டுமான தளங்களின் அருகாமையே இந்த சம்பவங்களுக்கு பங்களித்திருக்கலாம் என்று நகராட்சியும் ஒப்புக்கொண்டது. அதுமட்டுமின்றி, குடியிருப்பாளர்களை உறுதிப்படுத்த, கட்டுமானக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் டெவலப்பருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel