அமீரகத்தில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற சுற்றுலாதலமான கோர்பாக்கனில் நேற்று (செப்டம்பர் 23, செவ்வாய்க்கிழமை) கார்னிச் கடற்கரை முழுவதும் எண்ணெய்ப் படலம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கோர் ஃபக்கான் முனிசிபாலிட்டி அதன் சுற்றுச்சூழல் துறையின் விரைவான நடவடிக்கையின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் கசிவு விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சுற்றுச்சூழல் துறை எண்ணெய் தடயங்களைக் கண்டறிந்து உடனடியாக பரவலைக் கட்டுப்படுத்த குழுக்களை அணிதிரட்டியதாகக் கூறப்படுகின்றது. பிற நகராட்சித் துறைகளுடன் ஒருங்கிணைந்து, நகராட்சி இயக்குநரின் நேரடி அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, கடற்கரைக்குச் செல்வோர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க அந்தப் பகுதி திறமையாக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சுத்தம் செய்யத் தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு களக் குழுக்களை வழங்கி ஆதரவளித்த சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனமான ‘Bee’ah’வையும் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதிலும் அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கோர் ஃபக்கான் கடற்கரையில் இதுபோன்ற சம்பவம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் (EPAA) அல் லுலாய்யா மற்றும் அல் ஜுபரா கடற்கரைகளில் இதேபோன்ற எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அறிவித்தது, அதுவும் இதேபோல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

எண்ணெய் கசிவு என்றால் என்ன?
கச்சா எண்ணெய் அல்லது டீசல் அல்லது பெட்ரோல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் தற்செயலாக சுற்றுச்சூழலில், குறிப்பாக கடலில் வெளியிடப்படும்போது எண்ணெய் கசிவு ஏற்படுகிறது. இந்தக் கசிவுகள் விரைவாகக் கையாளப்படாவிட்டால் கடல்வாழ் உயிரினங்கள், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel