புதன்கிழமை நடைபெற்ற சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) மில்லினியம் மில்லினியர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராவில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா 1 மில்லியன் டாலர் (3.67 மில்லியன் திர்ஹம்) ஜாக்பாட் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் வசிக்கும் 56 வயது இந்தியரான எட்டியானிக்கல் பைலிபாபு (Ettiyanikkal Pailybabu) தலைமையிலான முதல் குழுவில் 10 பேர் உள்ளனர், அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 அன்று பைலிபாபு ஆன்லைன் டிக்கெட் எண் 3068 ஐ வாங்கியபோது அவர்களின் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த நண்பர்கள் குழு ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு நண்பரின் பெயரிலும் டிக்கெட்டை எடுத்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
எனவே, குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் இப்போது 1 மில்லியன் டாலர் பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், கேரளாவைச் சேர்ந்த பைலிபாபு, வீடு திரும்பியதும் தனது பங்கில் ஒரு சிறு தொழிலைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்றொரு வெற்றியாளர் ஷார்ஜாவைச் சேர்ந்த 46 வயதான மருத்துவமனை மேலாளர் கோபி தேவராஜன் ஆவார். சென்னையைச் சேர்ந்தவரும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையுமான தேவராஜன், ஆகஸ்ட் 14 அன்று தொடர் 514க்கான தனது அதிர்ஷ்ட ஆன்லைன் டிக்கெட் எண் 1978ஐ வாங்கியதாகக் கூறப்படுகின்றது. அவர் மூன்று நண்பர்களுடன் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார். தனது திட்டங்களைப் பற்றிப் பேசுகையில், வீட்டை வாங்கி சிறு தொழிலை தொடங்கப் போவதாகவும், குழந்தைகளின் கல்விக்காக சேமிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிகளின் மூலம், 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மில்லினியம் மில்லியனர் பரிசைப் பெற்ற இந்தியர்களின் பட்டியலில் 257வது மற்றும் 258வது இந்திய நாட்டினர் ஆக பைலிபாபு மற்றும் தேவராஜன் இடம்பிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களே தொடர்ந்து ரேஃபிள் டிக்கெட்டுகளை அதிகமாக வாங்குபவர்களாக உள்ளனர் என்றும், ஆண்டுதோறும் வெற்றியாளர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றும் DDF நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel