ஐக்கிய அரபு அமீரகம் அதன் விசிட் விசா மற்றும் ரெசிடன்சி விதிமுறைகளில் தொடர்ச்சியான முக்கிய புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது, அவற்றில் நான்கு புதிய விசா வகைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் ஏற்கனவே உள்ள பல அனுமதிகளுக்கான திருத்தப்பட்ட நிபந்தனைகளை வெளியிடுவது ஆகியவை அடங்கும்.
அதாவது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், உலகளாவிய திறமைசாலிகளை ஈர்த்தல் மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை ஆதரித்தல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தால் (ICP) இந்த மாற்றங்கள் இன்று திங்களன்று வெளியிடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
புதிய விசிட் விசா வகைகள்
அமீரகத்தில் தற்போது செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, நிகழ்வுகள், க்ரூஸ் கப்பல்கள் மற்றும் ஓய்வு கப்பல்கள் ஆகியவற்றில் நிபுணர்களை இலக்காகக் கொண்டு நான்கு புதிய விசிட் விசா வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிரிவுகள் திறமையான நிபுணர்களை ஈர்க்கவும், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஆதரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மனிதாபிமான மற்றும் குடும்பம் தொடர்பான அனுமதிகள்
- மனிதாபிமான குடியிருப்பு அனுமதி இப்போது ஒரு வருடத்திற்கு வழங்கப்படும், சில நிபந்தனைகளின் கீழ் இதனை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வெளிநாட்டு விதவைகள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் ஒரு வருட ஸ்பான்சர் இல்லாமல் குடியிருப்பு அனுமதியைப் பெறலாம், குறிப்பிட்ட தேவைகளின் கீழ் புதுப்பிக்கத்தக்கது.
ஸ்பான்சர்ஷிப் வருமானத் தேவைகள்
பார்வையாளர்களை ஸ்பான்சர் செய்ய விரும்பும் UAE குடியிருப்பாளர்களுக்கு ICP புதிய குறைந்தபட்ச சம்பளத் தேவைகளை நிர்ணயித்துள்ளது:
- முதல்-நிலை உறவினர்களான கணவன் அல்லது மணைவி மற்றும் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்ய குறைந்தபட்ச மாத வருமானம் 4,000 திர்ஹம்ஸ்
- இரண்டாம்-நிலை அல்லது மூன்றாம்-நிலை உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்ய குறைந்தபட்ச மாத வருமானம் 8,000 திர்ஹம்ஸ்.
- குடியிருப்பாளர்கள் தங்களின் நண்பர்களுக்கு ஸ்பான்சர் செய்ய குறைந்தபட்ச மாத வருமானம் 15,000 திர்ஹம்ஸ்.
விசா கால அளவுகள் மற்றும் நீட்டிப்புகள்
தற்போதைய திருத்தங்கள் அரைவல் விசாக்களின் கால அளவு மற்றும் நீட்டிப்புக்கான தெளிவான அட்டவணைகளையும் குறிப்பிடுகின்றன, இது விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறையை மிகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் வெளிப்படையானதாகவும் ஆக்கும் என்று கூறப்படுகிறது.
உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ரெசிடன்சி மற்றும் வெளியுறவு கொள்கைகளை கவனமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ICPயின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறியுள்ளார். மேலும் கவுன்சில்கள், அழைப்பு மையங்கள் மற்றும் சேவை தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமீரகத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை ஆதரித்தல், தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel