பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விடுமுறை என்றாலே உற்சாகமாகி விடுவார்கள். அதிலும் தொடர் விடுமுறை என்றால் விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று முன்கூட்டியே திட்டமிடுபவர்கள் ஏராளம். அப்படி இருக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை வரவிருக்கும் 2026 குறைந்தது 12 பொது விடுமுறை நாட்களைக் கொண்டு வரக்கூடும் என்றும், ஈத் அல் அதாவின் போது ஆறு நாள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் இன்னும் 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஹிஜ்ரி நாட்காட்டி மற்றும் அமைச்சரவை விதிகளின் அடிப்படையில், வானியலாளர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை தேதிகளை கணித்துள்ளனர். இது குடியிருப்பாளர்கள் முன்கூட்டியே திட்டமிட உதவும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
2025 இல் மீதமுள்ள விடுமுறை நாட்கள்
2026 ல் வரக்கூடிய விடுமுறைகளில் முன், இந்த ஆண்டில் இன்னும் சில விடுமுறைகள் உள்ளன:
- தியாகிகள் நினைவு நாள் – திங்கள், டிசம்பர் 1
- ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் – செவ்வாய் (டிசம்பர் 2) மற்றும் புதன் (டிசம்பர் 3) ஆகிய இரண்டு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை வாரத்தின் நடுப்பகுதியில் வருவதால் டிசம்பர் 1 ஆம் தேதி பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் நினைவு தினத்துடன் இணைந்து நான்கு நாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சூழலில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை நீண்ட வார இறுதி நாட்களை உருவாக்க சில விடுமுறை நாட்களை வாரத்தின் தொடக்கத்திற்கோ அல்லது முடிவிற்கோ நகர்த்தலாம் என்று 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண். 27இல் கூறப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முக்கிய விடுமுறை தேதிகள் (கணிக்கப்பட்டவை)
- புத்தாண்டு தினம் – வியாழன், ஜனவரி 1
- ரமலான் தொடக்கம்– பிறை பார்ப்பதை பொறுத்து பிப்ரவரி 18 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈத் அல் ஃபித்ர் – மார்ச் 20–22 வரை (3 நாள் விடுமுறை கிடைக்கலாம்)
- அரஃபாத் தினம் – செவ்வாய், மே 26
- ஈத் அல் அதா – மே 27–29 வரை (வார இறுதியுடன் சேர்த்தால் 6 நாள் விடுமுறை கிடைக்கும்)
- இஸ்லாமிய புத்தாண்டு – செவ்வாய், ஜூன் 16
- நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் (ஸல்) – செவ்வாய், ஆகஸ்ட் 25
- அமீரக தேசிய தினம் – டிசம்பர் 1 மற்றும் 2
2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறை ஈத் அல் அதா அன்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் குடியிருப்பாளர்களுக்கு ஆறு நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel