ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாக்களில் வசிக்கும் தனிநபர்கள் செல்லுபடியாகும் பணி அனுமதி மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறும் வரை வேலையைத் தொடங்க அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்ட வல்லுநர்களும் அமீரக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். இந்த சட்டம் அமீரகத்தில் வசிக்கும் பலருக்கு தெரியும் என்றாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விசிட் விசாவில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு விசிட் விசாக்களில் நாட்டில் தங்கியிருக்கும்போது வேலைவாய்ப்பு சலுகைகளைப் பெற்ற வேலை தேடுபவர்களின் பொதுவான விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தெளிவுபடுத்தல் வருகிறது,
வேலைவாய்ப்பு உறவுகள் ஒழுங்குமுறை குறித்த 2021 ஆம் ஆண்டின் 33 ஆம் எண் கூட்டாட்சி ஆணை சட்டத்தின் பிரிவு 6(1) இன் கீழ், மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்திடமிருந்து பணி அனுமதி பெறாமல் எந்தவொரு பணியாளரையும் எந்த முதலாளியும் பணியமர்த்தவோ அல்லது வேலை வழங்கவோ கூடாது” என்று சட்டம் கூறுகிறது.
இதேபோல், வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வசிப்பிடத்தை நிர்வகிக்கும் 2021 ஆம் ஆண்டின் 29 ஆம் எண் கூட்டாட்சி ஆணை சட்டத்தின் பிரிவு 5(4), வெளிநாட்டவர்கள் பணி அனுமதி மற்றும் குடியிருப்பு விசா உள்ளிட்ட பொருத்தமான சட்ட ஆவணங்களை வைத்திருக்காவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது என்று கட்டளையிடுகிறது.
வேலை வகை மற்றும் பரஸ்பர ஒப்பந்தத்தைப் பொறுத்து, முதலாளி 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண் 1 இன் கீழ் முழுநேர, பகுதிநேர, தற்காலிக அல்லது ஃப்ரீலான்ஸ் என தொடர்புடைய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செல்லுபடியாகும் பணி அனுமதி இல்லாமல் தனிநபர்களை ஈடுபடுத்தும் முதலாளிகளுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சட்டம் மேலும் எச்சரிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் எண் கூட்டாட்சி ஆணைச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 60(1)(a)இன் கீழ், இந்த விதிமீறல்களுக்கு முதலாளிகள் 100,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, விசிட் விசாக்களில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தங்கள் சட்டப்பூர்வ நிலை மாற்றப்படும் வரை வேலை செய்வதைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வெளிநாட்டவர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தவுடன் முதலாளி மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்துடன் (MoHRE) விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க வேண்டும், அதைத் தொடர்ந்து நுழைவு அனுமதி மற்றும் அதைத் தொடர்ந்து குடியிருப்பு விசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்து விசா நிலையைப் புதுப்பித்த பின்னரே, ஊழியர் அமீரகத்தில் சட்டப்பூர்வமாக வேலையைத் தொடங்க முடியும் என்பதை அமீரகத்தில் வேலைதேடும் மற்றும் வேலைச் சலுகைகளைப் பெற்ற அனைத்து வெளிநாட்டவர்களும் நினைவில் கொள்வது அவசியம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel