பொதுவாக தங்கத்திற்கும் தங்க நகைகளுக்கும் மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கும். அதன் பளபளப்பு, நேர்த்தி மற்றும் அதிகளவு விலை மதிப்பு மக்களை ஈர்க்கிறது. அத்தகைய விலையுயர்ந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை ஆவலுடன் வாங்கி அணிவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முழு தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு ஆடையை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா..?? அமீரகத்தில் இத்தகைய உடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
“Dubai Dress” என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான தங்க உடை, இப்போது ஷார்ஜாவில் உள்ள வாட்ச் அண்ட் ஜூவல்லரி மிடில் ஈஸ்ட் ஷோவில் (Watch and Jewellery Middle East Show) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 21 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த படைப்பு உலகின் மிகக் கனமான தங்க உடை என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது, சுமார் 10.08 கிலோகிராம் எடை கொண்ட இந்த உடையின் மதிப்பு 4.6 மில்லியன் திர்ஹம் என்று கூறப்படுகின்றது.
தங்க உடையின் நான்கு முக்கிய பாகங்கள்
- தங்க கிரீடம் (398 கிராம்)
- நெக்லஸ் (8,810 கிராம்)
- காதணிகள் (134 கிராம்)
- “Hiyar” என்று அழைக்கப்படும் இடுப்புத் துண்டு (738 கிராம்)
முந்தைய நிகழ்வில் 1.5 மில்லியன் திர்ஹம் மதிப்பில் தங்க மிதிவண்டியையும் (gold cycle) காட்சிப்படுத்திய அல் ரோமைசான் கோல்ட் அண்ட் ஜூவல்லரிதான் இந்த ஆடையையும் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சி உலகம் முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும் 1,800 தொழில் வல்லுநர்களையும் ஒன்றிணைக்கிறது, இதில் இத்தாலி, இந்தியா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் பல நாடுகளின் வடிவமைப்புகளும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளின் வலுவான பிராந்திய பங்கேற்பும் இடம்பெற்றுள்ளன.
ஐந்து நாள் கண்காட்சி, இப்போது அதன் 56வது பதிப்பில், எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது, அதுமட்டுமின்றி, பார்வையாளர்களுக்கு இலவச நுழைவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வியாழன், சனி, ஞாயிறு: மதியம் 1 மணி – இரவு 10 மணி
- வெள்ளி: பிற்பகல் 3 மணி – இரவு 10 மணி
இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் அற்புதமான தங்கம் மற்றும் நகை படைப்புகளை நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel