அபுதாபியில் உள்ள ஐந்து விமான நிலையங்களிலும் பயணிகள் போக்குவரத்து மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு சேவைகளை மேம்படுத்துவதற்காக, அபுதாபி விமான நிலைய ஆணையமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்துடன் (ICP) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டாண்மை அபுதாபி முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ‘ஸ்மார்ட் டிராவல்’ முயற்சியை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது பயணிகள் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் ஸ்மார்ட் கேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழு வினாடிகளில் இமிக்ரேஷன் செயல்முறையை முடிக்க அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நேற்று அக்டோபர் 6, 2025 திங்கள்கிழமை அன்று சையத் சர்வதேச விமான நிலையத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அபுதாபி விமான நிலையங்களின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலினா சோர்லினி மற்றும் ஐசிபியின் துறைமுகங்களின் செயல் இயக்குநர் ஜெனரல் முகமது அகமது அப்துல்லா அல் குவைத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முயற்சி அபுதாபி விமான நிலையங்களின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது, இதனால் பயணிகள் 12 நிமிடங்களுக்குள் விமான நிலையத்திலிருந்து வெளியேறி தங்கள் இலக்குகளை விரைவாக அடைய முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இது எங்கு செயல்படுத்தப்படும்
‘ஸ்மார்ட் டிராவல்’ பின்வரும் இடங்களில் அறிமுகப்படுத்தப்படும்:
- சையத் சர்வதேச விமான நிலையம்
- அல் அய்ன் சர்வதேச விமான நிலையம்
- அல் படீன் நிர்வாக விமான நிலையம்
- டெல்மா ஐலேண்ட் விமான நிலையம்
- சர் பானி யாஸ் ஐலேண்ட் விமான நிலையம்
2024 ஆம் ஆண்டில், அபுதாபி விமான நிலையங்கள் 29 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்தைப் பதிவு செய்தது, இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், புதிய அமைப்பு உயர் சேவை தரங்களைப் பராமரிக்கும் வேளையில், வளர்ந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை திறம்பட நிர்வகிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel