ADVERTISEMENT

ஷார்ஜா: கடற்கரையில் நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகளை காப்பாற்றிய நபர்!! துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

Published: 28 Oct 2025, 7:18 PM |
Updated: 28 Oct 2025, 7:18 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள அல் மம்சார் லகூன் கடற்கரையில் நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகளை துணிச்சலுடன் மீட்ட ஒரு இளம் நபர் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளார். 25 வயதான காசிம் முகமது அல் சையத் மஹ்மூத் (Qasem Mohamed Al Sayed Mahmoud) என்ற எகிப்திய நபரை குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது விரைவான நடவடிக்கை மற்றும் தைரியத்திற்காக ஷார்ஜா சிவில் பாதுகாப்பு துறை கௌரவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஷார்ஜா சிவில் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் யூசிப் ஒபைத் ஹர்மூல் அல் ஷம்சி மற்றும் துணை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சயீத் ஒபைத் ரஷீத் அல் சுவைதி ஆகியோர் இரு சிறுமிகளையும் சந்தித்து அவர்களின் உடல்நிலையை சரிபார்த்து அவர்கள் முழுமையாக குணமடைந்ததை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பிரிகேடியர் அல் ஷம்சி அவர்கள் பேசுகையில், மஹ்மூத்தின் துணிச்சலைப் பாராட்டியதுடன், இது சமூக உணர்வு மற்றும் மனிதநேயத்தின் உண்மையான எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், உயிர்களைக் காப்பாற்றுவது மிக உயர்ந்த செயல் என்றும், இதுபோன்ற செயல்கள் தைரியத்தையும் இரக்கத்தையும் காட்டுகின்றன, மற்றவர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்பேற்க ஊக்குவிக்கின்றன என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

என்ன நடந்தது?

ADVERTISEMENT

சம்பவம் குறித்து ஊடகங்களிடம் மஹ்மூத் விவரித்தபோது, சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில் கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென உதவிக்கான அலறல் சத்தம் கேட்டதாகவும், தண்ணீரில் தத்தளிக்கும் இரண்டு சிறுமிகளைப் பார்த்ததும் தனது தொலைபேசி மற்றும் கார் சாவியை விட்டுவிட்டு உடனடியாக கடலை நோக்கி விரைந்து இரு சிறுமிகளையும் பாதுகாப்பாக இழுத்து வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட பின்னர், ஒரு சிறுமிக்கு விரைவாக சுயநினைவு திரும்பியது, ஆனால் மற்றொரு சிறுமி அவசர குழுக்கள் வரும் வரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் இணைந்து பணியாற்றிய நிலையில், மீட்பு நடவடிக்கை கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, 8 (சூடான்) மற்றும் 4 (மொரிஷிய) வயதுடைய இரண்டு சிறுமிகளும் அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக குணமடைந்த பிறகு செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையால் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும், கடற்கரைகள் மற்றும் நீச்சல் பகுதிகளில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel