இந்தியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் கொண்டாட்டங்களில் ஒன்றான தீபாவளித் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தீபங்களின் பண்டிகை என்றும் அழைக்கப்படும் இந்த நன்னாளில் இந்தியர்கள் குடும்பத்தினருடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொள்வது, பட்டாசுகளை வெடிப்பது என உற்சாகமாய் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஆனால் துபாயில் வசிக்கும் பல இந்தியர்களுக்கு, தங்கள் குடும்பங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பெரும்பாலும் இந்த நேசத்துக்குரிய மரபுகளை இழந்து வெறுமை உணர்வு ஏற்படும்.
இந்நிலையில், துபாய் ‘Noor: Festival of Lights’ என்ற ஒரு மகத்தான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது, இது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு துபாயில் பண்டிகை உணர்வை மீண்டும் உருவாக்க, ஒன்றுகூடி, தாயகம் திரும்புவது போல் கொண்டாட சரியான வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலம் துபாயின் மிகப்பெரிய தீபாவளி கொண்டாட்டம் இந்த மாதம் நகரத்தை ஒளிரச் செய்ய உள்ளது, இது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கண்கவர் வாணவேடிக்கைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான அனுபவங்களை உறுதியளிக்கிறது.
அக்டோபர் 17 முதல் 25 வரை நடைபெறும் இந்த விழாவில் அல் சீஃப் மற்றும் குளோபல் வில்லேஜ் போன்ற எமிரேட்டின் ஐகானிக் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு விழா அட்டவணையையும் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) கீழ் உள்ள துபாய் பெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE), துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ‘Teamwork Arts’ ஆகிய அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டங்கள் அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 9 மணிக்கு துபாய் க்ரீக்கின் அல் சீஃப் கடற்கரையில் தொடங்கும், பாரம்பரிய தோவ்ஸ் (dhows) மற்றும் பழைய உலக கட்டிடக்கலை நவீன வானவேடிக்கைகளுடன் கலக்கும் இலவச வானவேடிக்கை காட்சியைக் காணலாம். அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், சிறந்த பார்வை இடங்களுக்கு குடும்பங்கள் சீக்கிரமாக வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நான்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் குளோபல் வில்லேஜில் விழாக்கள் தொடர்கின்றன, அதைத் தொடர்ந்து அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகள் நடைபெறும், இது தீபாவளி வார இறுதியில் பண்டிகைச் சூழலை மெருகேற்றும்.
இதற்கிடையில், ‘Noor – Festival of Lights’ அக்டோபர் 17 அன்று மாலை 6 மணிக்கு சூக் அல் சீஃபின் அழகான பின்னணியில், கலாச்சார ரீதியாக சிறப்பு அனுபவத்தை வழங்கும். தீபாவளியின் சாரத்தை தழுவி துபாயின் உணர்வை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் கொண்டாட்டமாக இந்த விழாவை ஏற்பாட்டாளர்கள் விவரித்துள்ளனர்.
பார்வையாளர்களுக்கான நிகழ்வுகள்
- பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகள்
- நடன நிகழ்ச்சிகள் மற்றும் கதை சொல்லும் நிகழ்வுகள்
- ரங்கோலி உள்ளிட்ட ஒர்க் ஷாப்கள்
- சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள்
தீபாவளியின் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தும், வாணவேடிக்கைகளின் கண்கவர் காட்சியுடன் கொண்டாட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் ‘Noor – Festival of Lights’ -இன் அனைத்து நிகழ்வுகளும் கலந்துகொள்ள இலவசம், இதனால் துபாய் முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் விழாவை அணுக முடியும். தீபாவளியின் அரவணைப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் உலகளாவிய செய்தியை அனுபவிக்க வரலாற்று சிறப்புமிக்க அல் சீஃப் கடற்கரையை சரியான பின்னணியாக ஏற்பாட்டாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.
புகழ்பெற்ற நகரத்தில் தீபாவளியின் மகிழ்ச்சி மற்றும் உணர்வைத் தழுவிக்கொள்ள குடியிருப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள், விரிவான நிகழ்ச்சிகள் மற்றும் ஒர்க்ஷாப்களை கொண்ட முழுமையான விழா அட்டவணை வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.