ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், துபாயில் பொறியியல் ஆலோசனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு புதிய சட்டத்தை வெளியிட இருப்பதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. இந்த சட்டம் இந்தத் துறையில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் முறையாக உரிமம் பெற்றவை மற்றும் துபாய் முனிசிபாலிட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது.
இது குறித்து வெளியான முதற்கட்ட விபரங்களின் படி, புதிய 2025 ஆம் ஆண்டின் சட்டம் எண் (14), நகரத்தில் பொறியியல் ஆலோசனை சேவைகளின் தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
உரிமம் மற்றும் நோக்கம்
இந்த சட்டத்தின் கீழ், எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ அதிகாரப்பூர்வ உரிமம் இல்லாமல் பொறியியல் ஆலோசனையில் ஈடுபடக்கூடாது. இந்த விதி கட்டிடக்கலை, சிவில், மின்சாரம், இயந்திரவியல், வேதியியல், கடலோர மற்றும் புவியியல் பொறியியல் உள்ளிட்ட அனைத்து பொறியியல் துறைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆலோசனை அலுவலகங்கள் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செயல்படக்கூடாது, பதிவு செய்யப்படாத பொறியாளர்களை பணியமர்த்தக்கூடாது அல்லது உரிமம் பெறாத நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உரிமம், வகைப்பாடு மற்றும் பதிவு செயல்முறைகளையும் துபாய் முனிசிபாலிட்டி மேற்பார்வையிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் ஆலோசனை நிறுவனங்களின் வகைகள்
சட்டம் இவற்றுக்குப் பொருந்தும்:
- துபாயில் நிறுவப்பட்ட உள்ளூர் நிறுவனங்கள்
- குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் கொண்ட UAE-ஐ தளமாகக் கொண்ட அலுவலகங்களின் கிளைகள்
- குறைந்தபட்சம் பத்து வருட அனுபவம் கொண்ட வெளிநாட்டு அலுவலகங்களின் கிளைகள்
- உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள்
- குறைந்தது பத்து வருட அனுபவம் கொண்ட பொறியாளர்களுக்குச் சொந்தமான ஆலோசனை அலுவலகங்கள்
- மூன்றாம் தரப்பு மதிப்பாய்வுகளை நடத்த அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் தணிக்கை அலுவலகங்கள்
அதுமட்டுமில்லாமல், ‘Invest in Dubai’ தளத்துடன் இணைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த மின்னணு அமைப்பு மூலம் பொறியியல் ஆலோசனை நிறுவனங்களுக்கான பதிவு, வகைப்பாடு மற்றும் சான்றிதழ் செயல்முறைகள் நெறிப்படுத்தப்படும் என்றும், துபாய் முனிசிபாலிட்டி உரிமம் பெற்ற நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் மற்றும் பணியின் நோக்கம் ஆகியவற்றின் விரிவான பதிவேட்டைப் பராமரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, செயல்படுத்தலை மேற்பார்வையிட நிர்வாகக் குழுவின் கீழ் பொறியியல் ஆலோசனை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கான நிரந்தரக் குழு அமைக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் விதிகளை மீறினால் 100,000 திர்ஹம் வரை அபராதமும், மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்தால் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும்.
இது தவிர விதிகளை மீறும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு கூடுதலாக கீழ்கண்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை,
- ஒரு வருடம் வரை இடைநீக்கம்
- வகைப்பாட்டை தரமிறக்குதல்
- உரிமம் ரத்து செய்தல்
- பொறியாளர்கள் அல்லது அலுவலகங்களின் பதிவை ரத்து செய்தல்
பாதிக்கப்பட்ட தரப்பினர் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம், மேலும் இறுதி முடிவுகள் மற்றொரு 30 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆக மொத்தம், தற்போதுள்ள பொறியியல் ஆலோசனை அலுவலகங்கள் சட்டம் அமலுக்கு வந்த ஒரு வருடத்திற்குள் தங்கள் நிலையை முறைப்படுத்த வேண்டும். இந்த சட்டம் விரைவில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் மற்றும் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel