துபாயில் நடைபெற்று வரும் GITEX Global 2025 கண்காட்சியில் துபாய் முனிசிபாலிட்டி (DM) ஒரு புதுமையான அமைப்பை அறிமுகப்படுத்தியது, இந்த அமைப்பின் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விரைவில் தங்கள் நகைகளின் தூய்மையை வெறும் 40 வினாடிகளில் சோதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
‘Smart Gold and Jewellery Testing Lab’ என்பது உலகின் முதல் சுய சேவை ஆய்வகங்களில் ஒன்றாகும், இது பயனர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் தூய்மையை உடனடியாக சரிபார்க்க அனுமதிக்கிறது.
இது குறித்து வெளியான அறிக்கைகளின் படி, புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகியவற்றைப் பயன்படுத்தி துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்து சோதனையை துரிதப்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த கியோஸ்க் விரைவில் எமிரேட் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனர்கள் தங்கள் நகைகளை இயந்திரத்தின் சோதனை ஸ்லாட்டில் வைக்கலாம், கார்டு மூலம் 40 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்தி சில நொடிகளில் இதன் உடனடி முடிவுகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து துபாய் மத்திய ஆய்வகத் துறையின் இயக்குனர் ஹிந்த் மஹ்மூத் கூறுகையில், நகை நம்பகத்தன்மையை விரைவாகச் சரிபார்க்க விரும்பும் பார்வையாளர்களின் கருத்துகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
“பல சுற்றுலாப் பயணிகள் எமிரேட்டில் உள்ள சூக்கை (souk) விட்டு வெளியேறுவதற்கு முன்பு தாங்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை விரைவாகச் சரிபார்க்க ஒரு வழி வேண்டும் என்று எங்களிடம் கூறினர், தற்போது, கராமாவில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நகை சோதனை ஏழு நாட்கள் வரை ஆகும், எனவே 40 வினாடிகளில் முடிவுகளை வழங்கும் ஒரு சுய-சோதனை முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.” என்று அவர் விவரித்துள்ளார்.
பயனர் நட்பு மற்றும் பன்மொழி
திங்கட்கிழமை Gitex கண்காட்சியில் அமைப்பின் முன்மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு சோதனைக்கும் முன், ஒரு கல்வி வீடியோ பயனர்களுக்கு பல மொழிகளில் செயல்முறை மூலம் வழிகாட்டுகிறது. இந்த அமைப்பு விரைவில் மால்கள், கோல்டு சூக் மற்றும் துபாய் முழுவதும் உள்ள பிற முக்கிய இடங்களில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு கியோஸ்க்கும் மூடப்பட்ட, பாதுகாப்பான கேபினட் இடத்திற்குள் நிறுவப்படும் என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது, இந்த இயந்திரம் ஒரு நேரத்தில் ஒரு பொருளின் தூய்மையை சோதிக்க முடியும். இருப்பினும், எதிர்கால மாதிரிகள் முழு நகை தொகுப்புகளையும் பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவையாகவும், வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் தங்க வர்த்தகம் மற்றும் தர உத்தரவாதத்திற்கான உலகளாவிய மையமாக துபாயின் நற்பெயரை வலுப்படுத்துகிறது என்று ஹிந்த் மஹ்மூத் மேலும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel