துபாய்வாசிகள் இப்போது நிலநடுக்கத்தின் போது செய்தி மற்றும் ஆடியோ ஆகிய இரண்டு எச்சரிக்கைகளையும் பெறும் வகையில் புதிய முறை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று நடைபெற்ற ‘AccessAbilities Expo 2025’ கண்காட்சியின் போது, எமிரேட்டின் நில அதிர்வு கண்காணிப்பு செயலியான ‘DB SAFE – OasisPlus for Dubai,’ இல் புதிய அப்கிரேட் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2018-இல் துபாய் முனிசிபாலிட்டியால் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட செயலி, இப்போது அரபு மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஆடியோ அறிவிப்புகளை வெளியிடுகிறது, இது நில அதிர்வு நிகழ்வுகளின் போது மாற்றுத்திறனாளி மக்கள் (PoD) உட்பட அனைத்து பயனர்களையும் முக்கியமான பாதுகாப்புத் தகவல் சென்றடைவதை உறுதி செய்கிறது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் புவிசார் மற்றும் கடல்சார் ஆய்வுப் பிரிவின் தலைவர் எமான் அல் ஃபலாசி அவர்கள் பேசுகையில், “புதிய ஆடியோ அம்சம் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது மற்றும் பூகம்பத்தின் போது முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகளை யாரும் தவறவிடாமல் பார்த்துக் கொள்கிறது,” என்று கூறியுள்ளார்.
இந்த செயலியின் பொதுப் பதிப்பு உடனடி பாதுகாப்பு எச்சரிக்கைகள், நில அதிர்வு நிகழ்வு விவரங்கள், பூகம்ப இருப்பிடங்கள் மற்றும் நிலநடுக்க வரைபடங்களை முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளுக்குள் வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் விரிவான நில அதிர்வு கண்காணிப்பு வலையமைப்பை நிறுவிய முதல் நகரமாக துபாய் மாறியுள்ளது, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா உட்பட 150 மீட்டருக்கு மேல் 263 கோபுரங்கள் உள்ளதால், நகரத்தின் உள்கட்டமைப்பு ஒவ்வொரு மட்டத்திலும் பாதுகாப்பை உறுதி செய்ய மேம்பட்ட கண்காணிப்பு தேவை என்றும் அல் ஃபலாசி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “நேரடி தாக்கம் இல்லாதபோதும் உயர்ந்த தளங்களில் உள்ளவர்கள் இந்த நடுக்கத்தை உணரலாம், துபாய் முனிசிபாலிட்டியில் உள்ள நில அதிர்வு மையம் நிகழ்நேர ஆதரவை வழங்க அதன் அமைப்பை அனைத்து அவசர பிரிவுகளுடனும் இணைக்கிறது.” என்று விவரித்துள்ளார்.
அப்ளிகேஷனை எவ்வாறு அணுகுவது?
உங்கள் மொபைலில் ‘DB SAFE – OasisPlus for Dubai’ செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதன் பிறகு, பயனர்கள்:
- அருகிலுள்ள பூகம்பங்கள் பற்றிய உடனடி எச்சரிக்கைகளைப் பெறலாம்
- பூகம்ப வரைபடங்கள் மற்றும் தீவிரத் தரவைப் பார்க்கலாம்
- குடியிருப்பாளர்கள் உணரும் நடுக்கங்களைப் புகாரளிப்பதன் மூலம் அதிகாரிகள் நிலநடுக்க தாக்கங்களை மதிப்பிடுவதற்கு உதவலாம்
இவை தவிர, ‘Geodesy and Hydrographic Survey Section’ன் வலைத்தளம் மூலம் பயனர் கையேடு மற்றும் வீடியோ பயிற்சி கிடைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் குறைந்தபட்ச நில அதிர்வு அபாயத்தை எதிர்கொண்டாலும், தெற்கு ஈரான் அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் நடுக்கங்கள் அவ்வப்போது குறிப்பாக உயரமான கட்டிடங்களில் உணரப்படுகின்றன, இந்த மேம்படுத்தலின் மூலம், துபாய் பூகம்பத் தயார்நிலை மற்றும் ஸ்மார்ட் நகர்ப்புற பாதுகாப்பில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கிறது என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel