ஷார்ஜாவில் உள்ள கோர் ஃபக்கனில் நேற்று (அக்டோபர் 6, திங்கட்கிழமை) மாலை நடந்த ஒரு பயங்கர சாலை விபத்தில் 41 வயது எமிராட்டி நபர் மற்றும் அவரது ஏழு மாத ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதில் குழந்தையின் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநருக்கு மிதமான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்தாலும், ஓட்டுநர் திடீரென காரை திருப்பியதாதாலும், வாகனம் தடுப்பு சுவரை கடந்து எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி பின்னர் அது கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் செயல்பாட்டு அறைக்கு இரவு 8:55 மணிக்கு விபத்து அறிக்கை கிடைத்ததாகவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கிழக்கு பிராந்திய காவல் துறையின் இயக்குநர் கர்னல் டாக்டர் வாலித் கமீஸ் அல் யமாஹி, துக்கமடைந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். மேலும், வாகன ஓட்டுநர்கள் வேக வரம்புகளுக்குக் கீழ்ப்படியவும், கவனம் செலுத்தவும், கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், இதுபோன்ற துயரங்களைத் தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel