ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் முடிந்த நிலையில், பல இடங்களில் வானிலை மாறி வருகின்றன. ராஸ் அல் கைமாவின் ஜபெல் ஜெய்ஸ் மலையில் இன்று அதிகாலை 17.4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்துள்ளது. அதேபோல் இன்று (சனிக்கிழமை) காலை அபுதாபியில் அடர்ந்த மூடுபனி உருவானதாகவும், இதனால் சாலைகளில் குறைந்த தெரிவுநிலை காணப்பட்டதாகவும் அபுதாபி காவல்துறை மற்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுபோன்ற வானிலையில் விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டவும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று (அக்டோபர் 11) காலை 5:45 மணி முதல் காலை 9:00 மணி வரை மூடுபனி உருவானதாகவும், இது முக்கியமாக மேற்கு பிராந்தியத்தில் கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளை பாதித்ததாகவும் NCM குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே,வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த வார நடுப்பகுதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலையற்ற வானிலை நிலைமைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இது தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகத் தயாராகவும் இருப்பதாகவும் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றத்தால், நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், நாட்டின் உட்பகுதிகளிலும் வசிப்பவர்கள், மேகமூட்டமான வானம், மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் தூசியான நிலை ஆகியவற்றை அனுபவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலின், சில பகுதிகளில் அதிக அலைகள் சீற்றத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் குறைந்த அழுத்த அமைப்பு மேல் வளிமண்டலத்தில் குளிர்ந்த காற்றைச் சந்திப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இது வெப்பநிலையை தணிக்கும் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் சிறிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இந்த வார இறுதியின் வானிலை நிலவரம்
- சனிக்கிழமை, அக்டோபர் 11: காலை மூடுபனியுடன் ஓரளவு மேகமூட்டமான வானம்.
- துபாய்: அதிகபட்சம் 35.6°C, குறைந்தபட்சம் 27.2°C
- அபுதாபி: அதிகபட்சம் 36.1°C, குறைந்தபட்சம் 26.1°C
- ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12: வெப்பச்சலன மேகங்கள் மற்றும் மழையுடன் மேகமூட்டமாக இருக்கும். மேலும், குளிரான வெப்பநிலை இருக்கும். காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தை எட்டும், இதனால் தூசி மற்றும் மணல் வீசும்.
- துபாய்: அதிகபட்சம் 36.7°C, குறைந்தபட்சம் 28.3°C
அபுதாபி: அதிகபட்சம் 36.1°C, குறைந்தபட்சம் 27.8°
இத்தகைய சீரற்ற வானிலைக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றவும், வெள்ளம் ஏற்படும் பகுதிகளைத் தவிர்க்கவும், மற்றும் பனிமூட்டமான அல்லது மழைக்காலங்களில் கவனமாக வாகனம் ஓட்டவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel