கடந்த ஜூலை மாதம் வேலை தேடி துபாய் வந்த 26 வயது இந்தியர் ஒருவர், வந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு கடுமையான மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இடுப்பிலிருந்து கீழே வரை செயலிழந்து நடக்க முடியாமல் போன சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த சாய் கிருஷ்ணா என்ற அந்த நபர், தனது வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையுடன் ஜூலை 16 அன்று விசிட் விசாவில் துபாயில் வந்திறங்கியுள்ளார். ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலையைப் பெற்றிருந்த அவர், தனது பணி அனுமதியை செயல்படுத்தத் தயாராக இருந்தபோது, இந்த சோகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனை படுக்கையில் இருந்து அமீரக செய்தி ஊடகத்திடம் பேசிய சாய், “எனக்கு முதலில் காய்ச்சல் இருந்தது, ஆனால் அது இவ்வளவு மோசமாகும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த தகவல்களின் படி, ஆகஸ்ட் 28 அன்று, அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது, அது விரைவாக காது தொற்று, கழுத்து விறைப்பு மற்றும் இறுதியில் சுயநினைவை இழக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது என கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு, செப்டம்பர் 2 ஆம் தேதி அவரது தங்குமிடத்தில் அவரது சக ஊழியர்கள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைக் கண்டறிந்து துபாய் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அக்யூட் பாக்டீரியா (நிமோகோகல்) மூளைக்காய்ச்சல் இருப்பதாகக் கண்டறிந்தனர், உயிருக்கு ஆபத்தான இந்த மூளை தொற்று ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் திரவம் குவிதல்) மற்றும் மூளைத் தொற்று (பக்கவாதம் போன்ற சேதம்) உள்ளிட்ட சிக்கல்களுக்கு வழிவகுத்தது என்பதையும் விவரித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, நோயின் தொற்று தன்மை காரணமாக அவர் 27 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். “என்னைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,இது என் வாழ்க்கையின் மிகவும் கடினமான காலம்.” என்று சாய் வேதனை தெரிவித்துள்ளார். 21 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு தொற்று இறுதியில் நீங்கிய போதிலும், நோய் அவரது கால்களை நிரந்தரமாக முடக்கிப் போட்டது.
அதுமட்டுமின்றி, அவரது விசிட் விசாவின் கீழ் காப்பீட்டுத் தொகை இல்லாததால், சாய் பெருமளவில் மருத்துவ சவால்களை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது பிரச்சினை குறித்து சமூக தன்னார்வலரான பிரவீன் குமாரின் கவனத்திற்கு செல்லவே, அவர் இந்திய சமூக நல நிதி மூலம் அவரை நாடு திரும்ப ஏற்பாடு செய்ய துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.
பின்னர், மருத்துவமனை அவரது மருத்துவக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்தது, மேலும் EK528 விமானத்தில் இருந்த எமிரேட்ஸ் கேபின் குழுவினர் மிகுந்த இரக்கத்துடன் அவருக்கு உதவி செய்தனர் என்றும் பிரவீன் தெரிவித்துள்ளார். சாயின் சூழ்நிலை, சுகாதார காப்பீடு அல்லது சரியான வேலைவாய்ப்பு பாதுகாப்பு இல்லாமல் விசிட் விசாக்களில் வரும் வேலை தேடுபவர்களின் தொடர்ச்சியான கவலையை எடுத்துக்காட்டுகிறது .
இப்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள சாய்க்கு, விஜயவாடாவில் உள்ள மருத்துவர்கள் அவரது உடல் இயக்கத்தை மீண்டும் பெற தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகின்றது. அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், அவர் தனது சக ஊழியர்கள், தூதரகம் மற்றும் அவருக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel