துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), மஜித் அல் ஃபுத்தைம் பிராபர்ட்டீஸ் (Majid Al Futtaim Properties) உடன் இணைந்து, ஷேக் சையத் சாலையில் புதிய 300 மீட்டர் பாலத்தைத் திறந்துள்ளது, இது அபுதாபி மற்றும் ஜெபல் அலியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மால் ஆஃப் எமிரேட்ஸ்க்கு (Mall of the Emirates) நேரடி அணுகலை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, ஒரு மணி நேரத்திற்கு 900 வாகனங்களை கையாளக்கூடிய ஒற்றைவழிப் பாலம், மாலுக்கான பயண நேரத்தை 10 நிமிடங்களிலிருந்து ஒரு நிமிடமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான போக்குவரத்து மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலைகள்
இந்தத் திட்டம் கெம்பின்ஸ்கி ஹோட்டலுக்கு (Kempinski Hotel) அருகிலுள்ள சாலையை ஒரு வழிப் போக்குவரத்திலிருந்து இருவழிப் போக்குவரத்தாக மாற்றியுள்ளது, மேலும் சுற்றியுள்ள சாலைகள், ஜங்ஷன்கள் மற்றும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் வசதிகளுக்கான விரிவான மேம்பாடுகளையும் உள்ளடக்கியது.
இது குறித்து RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தயர் அவர்கள் பேசுகையில், இந்த முயற்சி “போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதையும் முக்கிய பகுதிகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் இயக்கத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுமானத்தில் உம் சுகீம் இண்டர்செஷனில் தெற்கு நோக்கிய சாய்வுப் பாதையை (ramp) அகலப்படுத்துதல், உம் சுகீம் ஸ்ட்ரீட்டிலிருந்து வரும் வாகனங்களுக்கு எளிதாக அணுகலை வழங்கும் வகையில் சந்திப்பை மேம்படுத்துதல் மற்றும் மாலில் கார் பார்க்கிங் இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
அதுமட்டுமின்றி, RTA, மாலைச் சுற்றியுள்ள 2.5 கிமீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தியதுடன், ஆறு சிக்னல் செய்யப்பட்ட ஜங்ஷன்களை சேர்த்தது, மற்றும் மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்தில் பஸ் நிலையத்தை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, சாலை நடைபாதை, விளக்குகள், வடிகால் மற்றும் நிலப்பரப்பை மேம்படுத்தல் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்து திறன் மற்றும் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தியதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், ஒரு பாதசாரி பாலம் வழியாக மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel