ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்பவர்களுக்கான விமான டிக்கெட் கட்டணங்கள் சற்றே குறைந்துள்ள வேளையில், விரைவிலேயே இந்த கட்டணங்கள் மிக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமீரகத்தில் நடப்பு ஆண்டின் இறுதியில் தொடர் விடுமுறை வரவிருக்கிறது. எனவே இந்த விடுமுறை சீசனில் நீங்கள் தாய் நாட்டிற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் செய்யத் திட்டமிட்டால், உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இதுதான் சிறந்த நேரமாக இருக்கும்.
ஏனெனில், டிசம்பர் நெருங்கும்போது ஈத் அல் எதிஹாட், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அடுத்தடுத்து வரிசையாக விடுமுறை வருவதால் பயணத் தேவை அதிகரிக்கும். இதன்விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயங்கக்கூடிய விமானங்களின் டிக்கெட் விலை 50 சதவீதம் வரை உயரக்கூடும் என்று பயண வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, நவம்பர் பிற்பகுதி வரை காத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது இப்போது முன்பதிவு செய்யும் பயணிகள் 30 முதல் 40 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது, துபாயிலிருந்து round trip கட்டணங்கள் பெரிதாக உயரவில்லை என்றாலும், பலர் விடுமுறை நாட்களில் பயணம் செய்யும் போது, கட்டணங்கள் வழக்கமாக டிசம்பர் 20 மற்றும் 28க்கு இடையில் கணிசமாக அதிகரிக்கும் என கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில், டிக்கெட் விலைகள் இலக்கைப் பொறுத்து 30 முதல் 50 சதவீதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், விடுமுறை காலத்தில் அதிகமான மக்கள் விமானங்களை முன்பதிவு செய்கிறார்கள், குறைந்த விமான சேவைகளால் குறிப்பிட்ட அளவு இருக்கைகள் இருக்கும் என்பதால் அதிக தேவைக்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள் என விமான கட்டணங்களை நிறுவனங்கள் உயர்த்துகின்றன என கூறப்படுகின்றது.
இதனிடையே, அமீரகக் குடியிருப்பாளர்கள் நடப்பு ஆண்டின் இறுதி பொது விடுமுறையான ஈத் அல் எதிஹாட் விடுமுறை நாட்களைச் சுற்றி சரியாக திட்டமிடுவதன் மூலம் 9 நாள் விடுமுறையை அனுபவிக்க முடியும். அமீரகத்தில் ஈத் அல் எதிஹாட் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குடியிருப்பாளர்கள் டிசம்பர் 1, 4, மற்றும் 5 ஆகிய 3 நாட்கள் வருடாந்திர விடுப்பு எடுப்பதன் மூலம், பயணிகள் இந்த தேதிகளை இரண்டு வார இறுதி நாட்களுடன் சேர்த்து 9 நாள் விடுமுறையாக அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கால கட்டத்தில் அதிகளவு மக்கள் பயணிப்பார்கள்.
பொதுவாக, ஐக்கிய அரபு மீரகத்தில் டிசம்பர் மாதம் மிகவும் பரபரப்பான பயண காலங்களில் ஒன்றாக இருக்கிறது, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீட்டிற்கு பயணிக்கிறார்கள் அல்லது விடுமுறைக்கு வெளிநாடு செல்கிறார்கள். இந்த காலகட்டத்தில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள், துபாய் சர்வதேச விமான நிலையத்துடன் (DXB), அதிகளவு போக்குவரத்தை நிர்வகிக்க பயண ஆலோசனைகளை தவறாமல் வழங்கி வருகின்றன.
எனவே, சிறந்த கட்டணங்கள் மற்றும் இருக்கை விருப்பங்களுக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில், பயண நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இப்போது முன்பதிவு செய்தால் குறைந்தபட்சம் 25 முதல் 30 சதவிகிதம் வரை சேமிக்க முடியும். இது மலிவானது மற்றும் விடுமுறை நாட்களுக்கு முன்பே மன அமைதியை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel