ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் நாளை ‘சலாத் அல் இஸ்திஸ்கா’ என்று அழைக்கப்படும் மழைக்காக சிறப்பு தொழுகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தொழுகையானது வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜும்ஆ தொழுகைக்கு அரை மணி நேரம் முன்பாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்பவர்கள் அனைவரும், எல்லாம் வல்ல இறைவனிடம், தேசத்திற்கு மழை மற்றும் கருணையை வழங்க வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். இது வறட்சி காலங்களில் சமூகங்கள் மழைக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றும் பாரம்பரிய நடைமுறையாகும்.
சலாத் அல் இஸ்திஸ்கா என்பது மழைக்காக இறைவனிடம் வேண்டி நடத்தப்படும் ஒரு இஸ்லாமிய மரபு என மத அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இது இறை நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அனைத்து குடியிருப்பாளர்களும் நேர்மையுடனும் பணிவுடனும் இதில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நாடு தழுவிய இந்த பிரார்த்தனை, ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்லாமிய உறுதிப்பாட்டையும், நாடு முழுவதும் ஆன்மீக பிணைப்புகளை வலுப்படுத்தும் பொது வழிபாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அதன் முயற்சிகளையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel