எண்ணற்ற கணவுகளுடன் துபாய்க்கு விசிட் விசாவில் வந்திருந்த 19 வயது இந்திய இளைஞர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) மாலை தேராவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்பாராத இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய நாட்டவரான முகமது மிஷால் என்பவர், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தனது உறவினர்களுடன் தங்குவதற்காக சுமார் 15 நாட்களுக்கு முன்பு விசிட் விசாவில் துபாய் வந்திருந்தார் என்றும் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த நாளில், மிஷால் விமானங்களை புகைப்படம் எடுக்க பல மாடி கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரது குடும்ப நண்பர் விவரிக்கையில், “அவர் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விமான நிலையம் அருகில் இருப்பதால், அவர் விமானங்களின் நெருக்கமான காட்சியைப் பிடிக்க முயன்றபோது அவரது கால் இரண்டு குழாய்களுக்கு இடையில் சிக்கி சசமநிலையை இழந்து தரையில் விழுந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மிஷால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார், ஆனால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது. கோழிக்கோட்டில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்த மிஷால், தொழில்முனைவோராக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.
அவரது தந்தை கேரளாவில் ஒரு உணவகம் நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு இவர் ஒரே மகன் என்றும் கூறப்படுகிறது. சிறு வயதிலேயே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மரணம் அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழப்பை தொடர்ந்து, சட்டப்பூர்வ முறைகளை முடித்து வருவதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.