துபாய் ஏர்போர்ட் வழியாக பயணம் செய்வது இப்போது பயணிகளுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் விமான நிறுவனத்தின் புதிய பயோமெட்ரிக் முக அங்கீகார அமைப்பு மூலம், எமிரேட்ஸ் பயணிகள் இப்போது செக்-இன் முதல் போர்டிங் வரை பாஸ்போர்ட் அல்லது தொலைபேசி பயன்படுத்தாமல் கடந்து செல்ல முடியும்.
காத்திருப்பு நேரங்களைக் குறைத்து விமான நிலைய அனுபவத்தை வேகமாகவும் மென்மையாகவும் மாற்றும் நோக்கில் 85 மில்லியன் திர்ஹம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, விமான நிறுவனம் டெர்மினல் 3 முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கேமராக்களை நிறுவத் தொடங்கியுள்ளது.
துபாயின் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, பயணிகளை ஒரு மீட்டர் தொலைவில் இருந்து அடையாளம் காட்டுகிறது, அதாவது கேமராக்கள் உங்கள் அடையாளத்தை நொடிகளில் சரிபார்க்கும். எனவே, உங்கள் ஆவணங்களை உங்கள் பையில் இருந்து வெளியே எடுக்கத் தேவையில்லை.
இது எவ்வாறு செயல்படுகிறது?
நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்தாலும் சரி அல்லது சுற்றுலாவாசியாக இருந்தாலும் சரி, எந்தவொரு எமிரேட்ஸ் பயணியும் எமிரேட்ஸ் செயலி, சுய சேவை கியோஸ்க்குகளில் அல்லது செக்-இன் கவுண்டர்களில் எளிதாகப் பதிவு செய்யலாம். பதிவுசெய்தவுடன், நீங்கள் துபாய் வழியாக பயணிக்கும் ஒவ்வொரு முறையும் பயோமெட்ரிக் பாதையைப் பயன்படுத்தலாம்.
இது குறித்து எமிரேட்ஸின் துணைத் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான அடெல் அல் ரெதா அவர்கள் பேசுகையில், இந்த தொழில்நுட்பம் “வாடிக்கையாளர் அனுபவத்தை அதிக வேகம், செயல்திறன் மற்றும் துல்லியத்துடன் மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
வரிசைகளைத் தவிர்ப்பது எப்படி?
படி 1: பதிவு செய்யவும்
எமிரேட்ஸ் செயலி அல்லது செக்-இன் மூலம் உங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளிப்பதன் மூலம் பதிவு செய்யலாம். (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஸ்கைவர்ட்ஸ் உறுப்பினர்களுக்கு இது கிடைக்கிறது.)
படி 2: செக்-இன்
ஆவணங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக சுய சேவை கியோஸ்க்களில் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும். குறிப்பாக, டிரான்ஸிட் விமானங்களுக்கும் எமிரேட்ஸ் இதனை விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
படி 3: இம்மிகிரேஷன்
டெர்மினல் 3 இல் GDRFA ஸ்மார்ட் கேட்ஸ் வழியாக உங்கள் முகத்தைப் பயன்படுத்தி கடந்து செல்லவும். இந்த அம்சம் UAE குடிமக்கள், குடியிருப்பாளர்கள், GCC நாட்டவர்கள் மற்றும் பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டுகள் கொண்ட வருகையின் போது விசா வைத்திருப்பவர்களுக்கும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படி 4: லவுஞ்ச் (lounge) அணுகல்
அடிக்கடி பயணிப்பவர்கள் கான்கோர்ஸ் B இல் உள்ள எமிரேட்ஸ் லவுஞ்ச்களில் கேமராவைப் பார்ப்பதன் மூலம் நுழையலாம்.
படி 5: போர்டிங்
கான்கோர்ஸ் A, B மற்றும் C இல் தேர்ந்தெடுக்கப்பட்ட புறப்படும் வாயில்கள் இப்போது முக அங்கீகார போர்டிங்கை ஆதரிக்கின்றன, எனவே போர்டிங் பாஸ் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel