ஆயிரக்கணக்கான A320 ரக விமானங்களை உடனடி மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப புதுப்பிப்புகளுக்கு உட்படுத்த வேண்டும் என்ற அவசர அறிவுறுத்தலை ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டதை அடுத்து, உலகளாவிய விமானப் பயணம் இடையூறுகளை எதிர்கொள்கிறது. விமானத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய அமைப்பான ‘Elevator Aileron Computers (ELAC)’இல் உள்ள தரவு பாதிப்புக்குள்ளாகும் என்று விசாரணைகள் கண்டறிந்ததை அடுத்து, ஏர்பஸ் உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த நடவடிக்கை உலகளவில் கிட்டத்தட்ட 6,000 ஜெட் விமானங்களை (உலகளாவிய A320 விமானக் குழுவில் பாதிக்கும் மேற்பட்டவை) பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது, இது ஏர்பஸ் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
அக்டோபரில் ஒரு A320 ஆட்டோ பைலட் இயக்கத்தில் இருக்கும்போது ஒரு குறுகிய, எதிர்பாராத பிட்ச்-டவுன் இயக்கத்தை அனுபவித்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்ட கட்டுப்பாட்டாளர்கள், விமான நிறுவனங்கள் மென்பொருளைப் புதுப்பிக்கவும், சில சந்தர்ப்பங்களில், ஜெட் விமானங்கள் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு வன்பொருள் கூறுகளை மாற்றவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, ஆண்டின் மிகவும் பரபரப்பான பயண வார இறுதி நாட்களில் ஒன்றின் தொடக்கத்தில் உலகளாவிய விமான தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய சரிசெய்தல்களை முடிக்க அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள், விமானங்களை தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கியுள்ளன. விஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள், நீண்ட விமான நேரங்கள் மற்றும் சில விமானங்களை தற்காலிகமாக தரையிறக்குவதால் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து பயணிகளை எச்சரித்துள்ளன.
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில், பாதிப்பு குறைவாகவே உள்ளது. எதிஹாட் ஏர்வேஸ், அதன் A320 விமானக் குழுவில் தேவையான அனைத்து புதுப்பிப்புகளும் முடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது, இதனால் விமான நிறுவனம் முழுமையாக திட்டமிடப்பட்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடிந்தது என கூறியுள்ளது. கடுமையான குளிர்கால பயண நெரிசல் இருந்தபோதிலும், பணியை விரைவாக முடித்ததற்காக அதன் தொழில்நுட்பக் குழுக்களை விமான நிறுவனம் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு அதன் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்று மீண்டும் வலியுறுத்தியது.
அதேபோல், பாதிக்கப்பட்ட விமானங்களில் தேவையான சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப புதுப்பிப்புகளையும் மேற்கொண்டு வருவதாகவும், செயல்முறையை விரைவாக முடிக்க எதிர்பார்க்கிறது என்றும் ஏர் அரேபியா கூறியது. இதனால் பயணிகள் அனுபவிக்கும் எந்தவொரு சிரமத்திற்கும் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது மற்றும் சேவை தாமதங்களை குறைக்க பாடுபடுவதாக பயணிகளுக்கு உறுதியளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. UAE ஆபரேட்டர்கள் கூட்டாக 106 A320 ரக விமானங்களை இயக்குகின்றன என்று தொழில்துறை தரவுகள் குறிப்பிடுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ஏர் அரேபியா மற்றும் அதன் அபுதாபி துணை நிறுவனத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் ஆகியவை A320 ரக ஜெட் விமானங்களை இயக்காததால், இந்த உத்தரவு விமானச் செயல்பாடுகளை பாதிக்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான விமானங்கள் ஒப்பீட்டளவில் விரைவான சாஃப்ட்வேர் புதுப்பித்தலுக்கு பிறகு சேவைக்குத் திரும்பும் அதே வேளையில், ஹார்டுவேர் மாற்றங்கள் தேவைப்படும் மற்ற விமானங்கள் நாட்கள் அல்லது வாரங்கள் கூட இயக்கப்படாமல் இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகளவில், 11,000 க்கும் மேற்பட்ட A320 விமானங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறுகிய கால இடையூறுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் இந்த உத்தரவு முற்றிலும் முன்னெச்சரிக்கை என்று வலியுறுத்தியுள்ளன. இந்த சிக்கலுடன் எந்த விபத்துகளும் இணைக்கப்படவில்லை, மேலும் தீவிர சூரிய கதிர்வீச்சு காலங்களில் கூட விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் முழுமையாக நம்பகமானதாக இருப்பதை உறுதி செய்வதே புதுப்பிப்புகளின் நோக்கம் என்று எடுத்துரைக்கின்றன.
பிற நாடுகளின் விமானச் சேவைகளுடன் ஒப்பிடும்போது, ஐக்கிய அரபு அமீரக பயணிகளுக்கு, விமான அட்டவணைகள் பெரும்பாலும் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, உள்ளூர் விமான நிறுவனங்கள் தேவையான புதுப்பிப்புகளை முடிக்கவும், பரபரப்பான விடுமுறை காலம் முழுவதும் இயல்பான செயல்பாடுகளைப் பராமரிக்கவும் விரைவாக செயல்படுவதாக உறுதியளித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel