உலகளாவிய விமான தொழில்நுட்பத்திற்கான ஒரு பெரிய படியாக, Wi-Fi 7 தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் உலகின் முதல் விமான நிலைய ஆபரேட்டராக ஓமன் ஏர்போர்ட்ஸ் மாறியுள்ளன, இது அதன் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு புதிய அளவிலான வேகம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது என்று உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Huawei உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மேம்படுத்தல் இப்போது டிப்பார்ச்சர் ஹால் (departure hall), செக்-இன் கவுண்டர்கள், சில்லறை விற்பனை மண்டலங்கள் மற்றும் சாப்பாட்டு இடங்கள் உள்ளிட்ட முக்கிய பயணிகள் பகுதிகளில் செயலில் உள்ளதாகவும், முக்கியமான விமான நிலைய செயல்பாடுகளையும் ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, இந்த நெட்வொர்க் ஒட்டுமொத்த பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் அதே வேளையில் விமான நிலைய குழுக்களுக்கு தடையற்ற தகவல்தொடர்புகளை உறுதி செய்கிறது.
ஓமன் விஷன் 2040
இந்த டிஜிட்டல் மாற்றம் ஓமன் விஷன் 2040 உடன் நெருக்கமாக ஒத்துப்போவதாக அறிக்கைகள் கூறுகின்றன, இது ஸ்மார்ட் உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர டிஜிட்டல் சேவைகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த வெளியீடு விமான நிலைய வசதிகளை நவீனமயமாக்குவதற்கும் புதுமையான தீர்வுகள் மூலம் பயணிகள் பயணத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் அதன் நீண்டகால உத்தியை பிரதிபலிக்கிறது என்று ஓமன் ஏர்போர்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wi-Fi 7 அதி-உயர் அலைவரிசையை வழங்குகிறது மற்றும் முந்தைய தலைமுறைகளை விட கணிசமாக ஒரே நேரத்தில் அதிகளவு பயனர்களைக் கையாள முடியும் என்று கூறப்படுகிறது. மஸ்கட் சர்வதேச விமான நிலையம் போன்ற பரபரப்பான மையங்களுக்கு இது ஒரு முக்கிய பலனை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இது 40,000 க்கும் மேற்பட்ட பயணிகளை தினமும் சந்திக்கிறது. எனவே, பயணிகள் நெரிசலான பகுதிகளில் கூட வேகமான ஸ்ட்ரீமிங், மென்மையான பிரவுஸிங் மற்றும் அதிக நிலையான இணைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓமன் ஏர்போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் அம்ரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த அறிமுகத்தை “பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார். Wi-Fi 7 ஐ ஏற்றுக்கொள்வது “புதுமைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தில் ஒரு தலைமையாக ஓமன் விமான நிலையங்களின் நிலையை வலுப்படுத்துகிறது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த வெளியீட்டின் மூலம், ஓமன் ஏர்போர்ட்ஸ் இணைப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைத்து, உலகளவில் விமான தொழில்நுட்பத்தில் முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel