ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகள் வரவிருக்கும் டிசம்பர் 8 முதல் ஜனவரி 4 வரை ஒரு மாத கால குளிர்கால விடுமுறைக்கு தயாராகி வரும் நிலையில், குடியிருப்பாளர்கள் நீட்டிக்கப்பட்ட விடுமுறைக்கு நீண்டதூர பயணங்களை திட்டமிடுகின்றனர். இதனால் டிசம்பர் மாதம் நாட்டின் புதிய உச்ச பயண மாதமாக மாறியுள்ளது என்றும், குடும்பங்கள் தேசிய தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை இணைத்து ஒரு நீண்ட பயணத்திற்கு திட்டமிடுவதால் விமான முன்பதிவுகள் 35% அதிகரித்துள்ளதாகவும் பயண நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தேசிய தினத்திற்குப் பிறகு வரும் காலம் ஐக்கிய அரபு அமீரக குளிர்கால பயண பருவத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கமாக மாறியுள்ளது” என்று பயணத்துறை நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.
டிசம்பரில் பயணத் தேவை உயர்வு
குறிப்பாக, டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவுகள் விரைவாக நிரம்பி வருவதாகவும், பல குடியிருப்பாளர்கள் பள்ளி மூடல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதிக கட்டணங்கள் மற்றும் விமான சீட்டுகள் காலியாவதை தவிர்க்கவும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதாகவும் பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தேசிய தினம் மற்றும் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு காலம் ஆகிய இரண்டிற்கும் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிக கட்டணங்களை செலுத்த விரும்புவோருக்கு கூட கடைசி நிமிடத்தில் இருக்கைகள் கிடைக்காமல் போகலாம் என்று தெரிவிக்கின்றனர்.
அமீரகக் குடியிருப்பாளர்கள் பயணம் செய்யும் இடங்கள்
musafir.com இன் தரவு இந்த குளிர்காலத்தில் இரண்டு முக்கிய பயண போக்குகளை எடுத்துக்காட்டுகிறது:
- ரியாத் சீசன் மற்றும் கத்தார் குளிர்கால விழா போன்ற நிகழ்வுகளால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன் மற்றும் எகிப்துக்கு குறுகிய பிராந்திய பயணங்களைத் திட்டமிடுகின்றனர்.
- வியட்நாம், ஜப்பான், பாரிஸ், ரோம், லிஸ்பன், புடாபெஸ்ட், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி போன்ற நீண்ட தூர கலாச்சார பயணங்களுக்கு பிரபலமாக உள்ளன.
- இவற்றுடன் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்திக்கொள்ள சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் குடியிருப்பாளர்களும் ஏராளமாக உள்ளனர்.
இதற்கிடையில், இந்த சீசனின் சிறந்த தேர்வாக கப்பல் பயணங்கள் விரைவாக மாறி வருகின்றன. ஒரு நபருக்கு சுமார் 1,299 திர்ஹம்ஸ் விலையில் தொடங்கும் பயணத்தில், மஸ்கட், கசாப், தோஹா மற்றும் பஹ்ரைனுக்கு 3 முதல் 7 இரவு டூர் பேக்கேஜ்கள் குடும்பங்களையும் குழுக்களையும் பெருமளவில் ஈர்ப்பதாகவும் கூறப்படுகின்றது.
முன்கூட்டியே திட்டமிடல்
கிட்டத்தட்ட 30% பயணிகள் ஏற்கனவே தங்கள் குளிர்கால விடுமுறையை முன்பதிவு செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன, இது கடைசி நிமிட திட்டமிடலில் இருந்து தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம் அதன் மிக நீண்ட குளிர்கால விடுமுறையில் நுழையும் நிலையில், நிபுணர்கள் குடியிருப்பாளர்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு வலியுறுத்துகின்றனர். தற்போது பயணத் தேவை வலுவாக உள்ளதால், விலைகள் ஏற்கனவே உயர்ந்து வருகின்றன. எனவே, பயணிகள் விரைவில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel