கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட துபாய் சாக்லேட் அனைவரின் மத்தியிலும் பிரசித்தி பெற்று உலகளவில் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளும் அமீரகத்தில் வசிப்பவர்களும் இன்று வரை அதனை ஆவலுடன் வாங்கி ருசிக்கின்றனர். துபாய் சாக்லேட் நகரத்திற்கு வருகை தரும் எவரும் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
இதன் வரிசையில், அந்த வைரல் சாக்லேட்டை உருவாக்க உதவிய படைப்பாற்றல் மிக்கவர்களில் ஒருவர் அதே போன்ற ஆடம்பரமான மற்றுமொரு சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த முறை, அமீரக தலைநகரான அபுதாபியின் பெருமைக்கு புதிய சாக்லேட் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. துபாய் சாக்லேட்டை வடிவமைக்க உதவிய செஃப் நவ்யல் கேட்டிஸ் (Nouel Catis), அபுதாபி சாக்லேட் என்ற ஒரு புதிய படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் நீண்ட காலமாக எனது இரண்டாவது வீடாகக் கருதும் இடமான, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அபுதாபி சாக்லேட்டை உருவாக்கினேன்,” என்று செஃப் கேட்டிஸ் கூறியுள்ளார்.
தலைநகரத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சுவை
வெண்ணிலா மற்றும் பிஸ்தா போன்ற உன்னதமான சேர்க்கைகளுக்கு அப்பால், நகரத்தின் நேர்த்தியையும் கலாச்சார ஆழத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி சாக்லேட்டை வடிவமைத்திருப்பதாக செஃப் கேட்டிஸ் தெரிவித்துள்ளார். சுவை மற்றும் நறுமணத்திற்காக குங்குமப்பூ மற்றும் ஏலக்காயும், இனிப்பிற்காக தஹினா (tahina) மற்றும் பேரீச்சம்பழமும் மற்றும் துபாய் சாக்லேட்டை போன்றே மொறுமொறுப்பும் இந்த சாக்லேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு சாக்லெட்டிலும் உண்ணக்கூடிய 24-காரட் தங்கத் துகள்களால் தூவப்பட்டிருக்கும், இது தலைநகரின் காலத்தால் அழியாத நுட்பத்தை குறிக்கிறது. மேலும், எமிராட்டியர்கள் மற்றும் உலகளாவிய சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில், உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் கலவை மூலம் பாரம்பரியத்துடன் புதுமைகளை சமநிலைப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அபுதாபி சாக்லேட்டை எவ்வாறு வித்தியாசமாக தோற்றமளிக்கச் செய்ய வேண்டும், அதைப் பற்றி நாம் எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றி நானும் குழுவும் யோசித்தோம், எனவே துபாயில் பிஸ்தா இருந்தால், அபுதாபியில் தங்கம் இருக்கிறது என்ற எண்ணத்திற்கு வந்தோம். அபுதாபியைப் பொறுத்தவரை, சாக்லேட் பார் அதன் பாரம்பரியத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்று விளக்கியுள்ளார்.
ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு
செஃப் கேட்டிஸின் கூற்றுப்படி, சாக்லேட்டை உருவாக்க ஒரு வருடத்திற்கும் மேலாக சோதனை மற்றும் சுத்திகரிப்பு தேவைப்பட்டது. இதற்காக அவரது குழு எமிராட்டி நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூறுகையில் “நாங்கள் விரிவாக பரிசோதனை செய்தோம். மேலும் எங்கள் உள்ளூர் கூட்டாளர்களிடமிருந்து எப்போதும் கருத்துக்களைப் பெற்றோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
அபுதாபி சாக்லேட்டை எங்கே வாங்கலாம்?
அபுதாபி சாக்லேட் தற்போது முரூர் மற்றும் யாஸ் மாலில் உள்ள ரெயின் கஃபே விற்பனை நிலையங்களில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது, 200 கிராம் சாக்லேட்டின் விலை 100 திர்ஹம்ஸ் ஆகும். ஆன்லைன் ஆர்டர்கள் இந்த வார இறுதியில் ரெயின் கஃபேயின் தளங்கள் மூலம் திறக்கப்படும்.
அபுதாபி சாக்லேட்டை தங்கள் கஃபேக்களில் பிரத்தியேகமாக கிடைக்கச் செய்வதற்காக, உள்நாட்டு எமிராட்டி பிராண்டான ரெயின் கஃபேவுடன் செஃப் கேட்டிஸ் கூட்டு சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன என்று ரெயின் கஃபே செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்காலத் திட்டங்களில் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களுக்கு இந்த சாக்லேட் விரிவடைவதும், அபுதாபி சாக்லேட்டின் புதிய அளவுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பதிப்புகளை அறிமுகப்படுத்துவதும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel