ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இப்போது 12 மாதங்களுக்கு இலவச CAFU எரிபொருள் விநியோக சந்தாவை அனுபவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. amazon.ae/cafu என்ற இணையதளத்தில் கிடைக்கும் இந்த பிரத்யேக சலுகையில், பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு இலவச ஸ்டாண்டர்ட் மற்றும் ஐந்து இலவச இரவு நேர ஃபில்லிங் என்று 7 முறை எரிபொருள் விநியோகங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பலன், அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே உள்ள ஷாப்பிங், டெலிவரி மற்றும் பொழுதுபோக்கு சலுகைகளுடன் கூடுதலாக, ஆண்டுக்கு சுமார் 400 திர்ஹம்ஸ் சேமிப்பை வழங்குகிறது என்றும், இவை அனைத்தும் மாதத்திற்கு 16 திர்ஹம்ஸ் என்ற கட்டணத்தில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
CAFU மொபைல் ஆப்ஸ் -ஐப் பயன்படுத்தி, பிரைம் உறுப்பினர்கள் பார்க்கிங் இடங்கள், மால்கள், அலுவலகப் பகுதிகள் அல்லது குடியிருப்புப் பகுதிகள் போன்ற வசதியான இடங்களைத் தேர்ந்தெடுத்து, எப்போது வேண்டுமானாலும் எரிபொருள் விநியோகத்தைக் கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது துபாயில் உள்ள பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இது குறித்து அமேசான் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியின் துணைத் தலைவர் ரொனால்டோ மௌச்சாவர் கூறுகையில், இந்த கூட்டாண்மை ஐக்கிய அரபு அமீரகத்தின் வேகமான வாழ்க்கை முறைக்கு பதிலளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உங்கள் கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலேயே எரிபொருள் விநியோகம் கிடைப்பதால், பெட்ரோல் நிலையத்திற்குச் செல்லாமல், உங்கள் வேலை அல்லது குடும்ப நேரத்தில் கவனம் செலுத்த முடியும். இந்த பலனின் மதிப்பு மாதாந்திர பிரைம் கட்டணத்தை விட 5 மடங்கு அதிகம்,” என்று எடுத்துரைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய,CAFU-வின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரஷீத் அல் குரைர் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு வசதி மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் இரண்டையும் மேம்படுத்துகிறது.
“அமேசானுடன் கூட்டு சேர்வது எங்கள் சேவையை விரிவுபடுத்துகிறது மற்றும் பிரைம் உறுப்பினர்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஒரு சிறந்த, தடையற்ற வழியை வழங்குகிறது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இப்பகுதியின் முதல் ஆன்-டிமாண்ட் எரிபொருள் மற்றும் வாகன சேவைகளுக்கான தளமான CAFU, அதன் செயலி மூலம் மாதாந்திர எரிபொருள் விநியோகங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.
இதுவரை பிரைம் உறுப்பினராக இல்லாத பயனர்கள், CAFU சலுகையைப் பெறவும், வேகமான டெலிவரி, அமேசான் ஃப்ரெஷ், டெலிவரூ பிளஸ் சில்வர், பிரைம் வீடியோ மற்றும் பிரத்யேக ஷாப்பிங் சலுகைகள் உள்ளிட்ட பிரைம் பலன்களின் முழுப் பட்டியலை அணுகவும் amazon.ae/prime என்ற இணையதளத்தில் சேரலாம். அதேபோல், பிரைம் உறுப்பினர்கள் amazon.ae/cafu என்ற இணையதளத்தில் CAFU சந்தாவைப் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel