ADVERTISEMENT

துபாயில் 550 மில்லியன் திர்ஹமுக்கு விற்பனையான பென்ட்ஹவுஸ்.!! சாதனை படைத்த துபாய் ரியல் எஸ்டேட் நிறுவனம்.!!

Published: 13 Dec 2025, 11:14 AM |
Updated: 13 Dec 2025, 11:19 AM |
Posted By: Menaka

ஆடம்பர வில்லாக்கள், வானுயர்ந்த பென்ட்ஹவுஸ்கள் மற்றும் அதிநவீன வாழ்க்கை முறை ஆகியவற்றிற்காக நீண்ட காலமாகப் புகழ்பெற்ற துபாய், உலகளாவிய ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் ஒருமுறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகெங்கும் உள்ள பணக்காரர்கள், செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்களை ஈர்க்கும் ஒரு மையமாக அறியப்படும் துபாய் நகரம், 550 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு (ஏறத்தாழ 1,356 கோடி ரூபாய்) ஒரு அதிஆடம்பர பென்ட்ஹவுஸை விற்பனை செய்ததன் மூலம் ஒரு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஆம், இது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் இதுவரை விற்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடாகும்.

ADVERTISEMENT

ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய சாதனை படைத்த இந்தச் சொத்து, பிசினஸ் பே-யில் உள்ள பிங்ஹாட்டி நிறுவனத்தின் புகாட்டி ரெசிடென்சஸ்-இல் (Bugatti Residences by Binghatti) அமைந்துள்ளது. 47,200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பென்ட்ஹவுஸ், சதுர அடிக்கு 11,650 திர்ஹம் என்ற விலையில் விற்கப்பட்டுள்ளதாகவும், இது பிசினஸ் பே-யில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே ஒரு சதுர அடிக்கு மிக உயர்ந்த விற்பனை விலை என்றும் அந்த கட்டுமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிங்ஹாட்டி நிறுவனம் தனது ஸ்கை மேன்ஷன் பென்ட்ஹவுஸ்கள் இணையற்ற தனியுரிமை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வசதிகளை வழங்குவதாகக் கூறியுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் மிகவும் விலையுயர்ந்த பென்ட்ஹவுஸிற்கான முந்தைய சாதனை, பாம் ஜுமேராவில் உள்ள கோமோ ரெசிடென்சஸ்-இல் நக்கீல் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் 71 மாடிகளைக் கொண்ட கட்டிடத்திடம் உள்ளது, இந்தக் கட்டிடம் 2027-ல் கட்டி முடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய சாதனை குறித்து கருத்து தெரிவித்த பிங்கட்டி நிறுவனத்தின் தலைவர் முஹம்மது பிங்ஹாட்டி, 2025-ல் தங்கள் நிறுவனம் சந்தையில் ஒரு முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். “இந்த ஆண்டு இதுவரை, நாங்கள் 14,000-க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்றுள்ளோம். இது துபாய் நிலத் துறைத் தரவுகளின்படி, எங்களை துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலிடத்திலும், நகரத்தின் முதல் மூன்று கட்டுமான நிறுவனங்களிலும் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

ADVERTISEMENT

இதுவரை பென்ட்ஹவுஸை வாங்குபவரின் அடையாளம் வெளியிடப்படாத நிலையில், பிராண்டட் குடியிருப்புகள் அவற்றின் வலுவான முதலீட்டு வருமானம் மற்றும் வாழ்க்கை முறை ஈர்ப்பு காரணமாக தொடர்ந்து அதிக வருமானத்தை வழங்குகின்றன என்று தொழில் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகப் பிரபலங்களை ஈர்க்கும் துபாயின் சொகுசு வீடுகள்

துபாயின் அதி சொகுசு சொத்து பிரிவு, உலகம் முழுவதிலுமிருந்து வரும் பெரும் பணக்காரர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர், இத்தாலிய ஓபரா ஜாம்பவான் ஆண்ட்ரியா பொசெல்லி மற்றும் சர்வதேச கால்பந்து வீரர் அய்மெரிக் லபோர்ட் போன்ற நட்சத்திரங்கள் புகாட்டி ரெசிடென்ஸில் வீடுகளை வாங்கியுள்ளதாக பிங்கட்டி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல், டமாக் பிராப்பர்டீஸ், தனூப் பிராப்பர்டீஸ், அமாலி பிராப்பர்டீஸ் மற்றும் நக்கீல் உள்ளிட்ட பிற கட்டுமான நிறுவனங்களும், தங்களின் பிரீமியம் திட்டங்களில் உலகப் பிரபலங்களிடமிருந்து பெரும் ஆர்வத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

தொழில்துறை நிர்வாகிகளின் கூற்றுப்படி, பிராண்டட் குடியிருப்புகள் இப்போது பாரம்பரிய வீடுகளை விட சுமார் 40 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. 2031-ஆம் ஆண்டுக்குள் 140-க்கும் மேற்பட்ட பிராண்டட் திட்டங்கள் நிறைவடைய உள்ள நிலையில், துபாய் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்து முதலீட்டில் ஒரு உலகளாவிய மாற்றத்திற்குத் தலைமை தாங்குகிறது என கூறப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel