ADVERTISEMENT

2026 புத்தாண்டுக்கு துபாய் முழுவதும் 40 இடங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சி.!!

Published: 26 Dec 2025, 8:14 PM |
Updated: 26 Dec 2025, 8:14 PM |
Posted By: Menaka

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் 2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், துபாய் நகரமானது 40 இடங்களில் 48 வாணவேடிக்கைக் காட்சிகளுடன் இதுவரை இல்லாதளவு மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் 36 இடங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த சாதனை படைக்கும் வாணவேடிக்கை நிகழ்சிகளின் போது பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை சீராக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்காக, 55 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் 23,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இதுவரை ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவே மிகவும் விரிவான நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் காவல்துறை 9,884 அதிகாரிகளுடன் பாதுகாப்புப் பணிகளுக்குத் தலைமை தாங்கும் என்றும், இவர்களுக்கு 13,502 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆதரவளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் 1,625 பாதுகாப்பு ரோந்துப் பிரிவுகள், மிதிவண்டி மற்றும் குதிரைப்படைப் பிரிவுகள், மற்றும் கடற்கரை மற்றும் நீர்வழிப் பகுதிகளைக் கண்காணிக்க 53 கடல்சார் மீட்புப் படகுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவைகள்

லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு பெரிய போக்குவரத்துத் திட்டத்தை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 14,000 டாக்ஸிகள், 1,300 பொதுப் பேருந்துகள் மற்றும் 107 மெட்ரோ ரயில்கள் அடங்கும். நகரத்தில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிசெய்ய 5,500-க்கும் மேற்பட்ட RTA ஊழியர்கள் இவற்றை நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மருத்துவ சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, 236 ஆம்புலன்ஸ்கள், 635 துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுமார் 1,900 மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் 12 மருத்துவமனைகள், பல வெளிப்புற மருத்துவ மையங்களுடன், தேவைப்பட்டால் அவசரநிலைகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக துபாய் சிவில் பாதுகாப்புத் துறை, தீ பாதுகாப்பு மற்றும் அவசரகாலப் பதிலளிப்புப் பணிகளைக் கையாள 1,754 பணியாளர்கள் மற்றும் 165 வாகனங்களும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், எமிரேட் முழுவதும் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel