ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் கனமழை..!! கடைகள், வாகனங்கள் சேதம்.. பொது இடங்கள் மூடல்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

Published: 18 Dec 2025, 5:39 PM |
Updated: 18 Dec 2025, 5:39 PM |
Posted By: Menaka

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதலே ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழையோடு ஆலங்கட்டி மழை, பலத்த காற்று வீசுவதால் மோசமான வானிலை குடியிருப்புவாசிகளின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. இதனால் அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் அவசர சேவைகள் பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய அறிக்கைகளின் படி, துபாய், ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் அஜ்மான் உள்ளிட்ட பல எமிரேட்டுகளில் கனமழை பெய்து சாலைகளில் குளம்போல் வெள்ள நீர் தேங்கியது, இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கனமழை சில பகுதிகளில் வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராஸ் அல் கைமாவின் சில பகுதிகளில், பலத்த காற்று வீசியதால் கடைகள் மற்றும் தொழில்துறை கிடங்குகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிப்புற நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.மேலும், வெப்பநிலை கடுமையாகக் குறைந்து, ஜபல் ஜெய்சில் 9.2°C ஆகப் பதிவானதாக NCM அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களை தற்காலிகமாக மூடுவதாக துபாய், அஜ்மான் உள்ளிட்ட எமிரேட்டுகள் அறிவித்துள்ளன. பொது இடங்கள் மட்டுமின்றி, பிரபலமான சுற்றுலாத் தலங்களும் பாதிக்கப்பட்டன. துபாயின் புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் டிசம்பர் 18 அன்று மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹத்தா வின்டர் ஃபெஸ்டிவல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் துபாய் சஃபாரி பார்க், ஷார்ஜா சஃபாரி பார்க் போன்றவையும் மூடப்பட்டுள்ளன.

இந்த வானிலை நாளையும் நீடிக்கும் என்பதால், துபாய் டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை அன்று அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளது. தனியார் துறையினரும் இதைப் பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கின. சாத்தியமான போக்குவரத்து தாமதங்கள் மற்றும் செயல்பாட்டுத் தடங்கல்களைக் காரணம் காட்டி, எமிரேட்ஸ் மற்றும் ஃபிளைதுபாய் விமான நிறுவனங்கள் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன் தங்கள் விமான நிலவரத்தை தொடர்ந்து சரிபார்க்கவும், தொடர்பு விவரங்களைப் புதுப்பித்து வைத்திருக்கவும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்றொரு புறம், காவல்துறை மற்றும் அவசர காலக் குழுக்கள் நாடு முழுவதும் தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளன. துபாய் காவல்துறை காற்றினால் விழுந்த மரங்கள், சேதங்கள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், குடியிருப்பாளர்களின் புகார்களுக்கு உடனடியாக பதிலளிக்கவும் மீட்பு வாகனங்கள், கிரேன்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வெள்ள அபாயம் மற்றும் மோசமான சூழ்நிலைகள் காரணமாக, குடியிருப்பாளர்கள் பள்ளத்தாக்குகள், மலைப் பகுதிகள், கடற்கரைகள் மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அதேசமயம், டெலிவரி ரைடர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல பகுதிகளில் விநியோக சேவைகள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் துபாய் மெட்ரோ ஸ்டேஷன்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆங்காங்கே, மழை காரணமாக சிக்னல் கோளாறுகள், சேவைச் சாலைகளில் வெள்ளம் மற்றும் வாகனப் பழுதுகள் ஏற்பட்டதால், முக்கிய சாலைகள் முழுவதும் போக்குவரத்து மெதுவாகச் சென்றதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டவும், வேகத்தைக் குறைக்கவும் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றனர்.

நிலையற்ற வானிலை வெள்ளிக்கிழமை வரையிலும் தொடரும் என்பதால், சூழ்நிலை மேம்படும் வரை குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றவும் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel